கோவிலை சீரமைக்க லஞ்சம் கேட்ட செயல் அலுவலர் கைது: பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை

கோவிந்தராஜ் ஏற்கனவே இது போன்று வேறொரு மாவட்டத்தில் பணியாற்றியபோது வேறொரு லஞ்ச வழக்கில் கைதாகி பணியிறக்கம் செய்யப்பட்டு, பணிமாற்றத்தின் பேரில் பெரம்பலூருக்கு வந்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Arrest Person

பெரம்பலூரை அடுத்த செங்குணம் கிராமத்தில் அருள்மிகு ஶ்ரீ பரமேஸ்வரர் ஆலய திருக்கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோவில் பழமை வாய்ந்தது என்பதால் இதனை சீரமைக்க முடிவு செய்த பொதுமக்கள், பெரம்பலூர் அருள்மிகு ஶ்ரீ மதனகோபாலசுவாமி திருக்கோவிலின் இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தின் செயல் அலுவலரை சந்தித்து கேட்டுள்ளனர்.

Advertisment

அறநிலையத்துறை அலுவலகத்தின் செயல் அலுவலராக இருக்கும், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்(59) என்பவர், கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறையின் ஆணையரிடம் இருந்து ஒப்புதல் பெற்று அனுமதி ஆணை பெறுவதற்கு பெரம்பலூர் மாவட்ட அறநிலையத்துறை மூலம் பணிகள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த சிவா என்பவர் பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சிவாவிடம் இரசாயனம் தடவிய ரூ.3000  பணத்தை கொடுத்து அனுப்பி வைத்துள்ளனர். அதன்படி பெரம்பலூர் அறநிலையத்துறை அலுவலகத்திற்கு சென்ற சிவா, செயல் அலுவலர் கோவிந்தராஜை சந்தித்து பணத்தை கொடுத்தபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹேமசித்ரா, ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான போலீசார் கோவிந்தராஜை கையும் களவுமாக கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கோவிலை சீரமைக்க அனுமதி ஆணை பெற்று தர அறநிலையத்துறை அலுவலக செயல் அலுவலர் லஞ்சம் கேட்டுள்ள சம்பவம் பெரம்பலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கோவிந்தராஜ் ஏற்கனவே இது போன்று வேறொரு மாவட்டத்தில் பணியாற்றியபோது வேறொரு லஞ்ச வழக்கில் கைதாகி பணியிறக்கம் செய்யப்பட்டு, பணிமாற்றத்தின் பேரில் பெரம்பலூருக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

க.சண்முகவடிவேல்

Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: