சினிமா கலைஞர்களை சாதிவாரியாக இந்து தீவிரவாதம் பிரிகிறது என நடிகர் கமல்ஹாசன் பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஆனந்த விகடன் வார இதழில் தொடர் எழுதி வருகிறார். இன்று வெளியான இதழில், இந்து தீவிரவாதம் குறித்து அவர் சொன்ன கருத்துக்கள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘நீங்கள் பல முனைகளில் பயனுள்ள தலியீடுகள் செய்வதில் மகிழ்ச்சி. சீர்திருத்தத்திலும் மாற்றங்களிலும் தமிழ்நாட்டின் பல இயக்கங்களின் சரித்திரத்தை நீங்களும் உணர்ந்தவரே.
பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டையும் தாண்டிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. பல சமூகங்கள் ஊக்கத்திற்கும் உத்வேகத்திற்கும் தமிழகத்தை எதிர்பார்த்திருக்கிறேன். எனினும் சமீபகாலமாக இனவாத பேதமும் பிற்போக்குத்தனமும் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. இந்துத்துவ சக்திகள் மெதுவாக ஊடுருவுவதன் மூலம் திராவிடப் பண்பாட்டை பலவீனப்படுத்துகின்றன. ஒரு சமூக ஆர்வலராக இது பற்றிய உங்கள் கருத்து என்ன?’ என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த கமல்ஹாசன், திராவிட இயக்கம் பற்றியும், பெரியாரின் வைக்கம் போராட்டம் பற்றியும் சொல்லிவிட்டு, ‘சமூகம் சமசீர் அடைவதில் கலக்கம் கொள்ளும் பழைய தலைமுறையினர் (அதிலும் மேல் சாதியினரில் உள்ள பழந்தலைமுறையினர்), இளைய சமுதாயத்தினருள் தங்கள் பழைமைவாதத்தை, சாதிய சனாதனக் கட்டுப்பாடுகளை நவீனத் தேன் தடவித்தர, திணிக்க முயற்சி செய்கின்றனர். கலாசாரம், பண்டிகைகள், இறைவழிபாடு, இசை, கலை என்று பல வழிகளிலும் பழைமையைப் பரப்ப முற்படுகின்றனர். மற்ற மதங்களிலும் உள்ள வலது சாரிகளும் பதிலுக்கு எதிர்வாதம் செய்யவும் எதிர்வினை ஆற்றவும் கிளம்புகிறார்கள். இது நாடு தழுவிய சீரழிவு.
முன்பெல்லாம் அமைதியாக நடந்த பல பண்டிகைகளில் ஆர்பாட்டம் அதிகமாகி, பக்தியையும் தாண்டிய வர்த்தக்கமாக அவை மாறிவருகின்றன. இதைத் தமிழக மக்கள் பல ஆண்டுகளாக கவனித்து வருகிறார்கள். ஒரு தலைமுறையே சாதிய வித்தியாசங்கள் தெரியாமல் வளர்ந்து வரும்வேளையில் இத்தலைமுறையினர் உலவும் நவீனத்தளங்களிலும் பழமைவாதிகள் புகுந்து சாதி வித்தியாசங்களைப் போதிக்க தொடங்கிவிட்டார்கள். அதன் பிரதிபலிப்பாக இணையதளத்தில் சினிமாக் கலைஞர்களைச் சாதிவாரியாகப் பிரித்துப் பட்டியலிடும் வேலைகள் பகிரங்கமாக நடக்கின்றன.
இத்தகைய இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் தாங்கள் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்தப் பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டனர். அவர்களும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.
‘எங்கே ஓர் இந்து தீவிரவாதியைக் காட்டுங்கள்?’ என்ற சவாலை இனி அவர்கள் விடமுடியாது. அந்த அளவுக்கு அவர் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவியிருக்கிறது. இந்தத் தீவிரவாதம் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கு எவ்விதத்திலும் வெற்றியோ முன்னேறமோ அல்ல. வாய்மை வெல்லும் என்ற நம்பிக்கை போய், வலிமை வெல்லும் என்ற ஒரு நம்பிக்கை நம் அனைவரையும் காட்டுமிராண்டிகளாக்கிவிடும். மாறாது நடப்பது மாற்றம் மட்டுமே. எத்தனை பேர் முயன்று அதைப் பின்னோக்கி தள்ளினாலும், சூழலும் இவ்வுலகின் ஈரிப்பு அதை முன்னோக்கித் தள்ளிவிடும். மீண்டும் தமிழகம்ன் சமூகச் சீர்திருத்ததிற்கு முன்னுதாரணமாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இன்றைய நிலையில் அந்த முன்னுதாரணமாய் கேரளம் திகழ்கிறது. அதற்கு வாழ்த்துக்கள்.’’ என்று பதிலளித்துள்ளார்.