கட்சியில் பதவி பெறுவதற்காக ஆள்வைத்து கத்தியால் இந்து மக்கள் கட்சி பிரமுகர் வெட்டிக்கொண்ட பரபரப்பு தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருப்பூரை அடுத்த பெருமாநல்லூர் அருகே கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால்(வயது48). இவர் அதே பகுதியில் எலெக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளார். அதோடு இந்து மக்கள் கட்சியின் மாவட்ட துணை செயலாளராகவும் இருந்து வருகிறார்.
17ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு நந்தகோபால் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்றபோது, 2 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் தன்னை வழிமறித்து கைகள் மற்றும் தோளில் கத்தியால் வெட்டியதாக கூறி திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி அறிந்ததும் இந்து மக்கள் கட்சியினர் அரசு மருத்துவமனையில் திரண்டனர். இந்த சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. சம்பவம் பற்றி அறிந்ததும்போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இந்து மக்கள் கட்சி நிர்வாகி தாக்கப்பட்ட இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் கணக்கம்பாளையத்தில் பதட்டம் நிலவியது.
பதட்டத்தை தணிக்க, சம்பவ இடத்தில் மத்திய அதிவிரைவுப்படையினர் மற்றும் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
நந்தகோபால் அளித்த புகாரின் பேரில் பெருமாநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதுதொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இதில், நந்தகோபால் கட்சியில் பதவி பெற சுய விளம்பரத்துக்காக தனது கார் டிரைவரான ருத்ரமூர்த்தியிடம்(20) சேர்ந்து திட்டமிட்டு தாக்குதல் நாடகத்தை அரகேற்றியது தெரியவந்தது.
இந்தநிலையில் டிரைவர் ருத்ரமூர்த்தி திருப்பூர் வடக்கு தாசில்தார் பாபுவிடம் சரண் அடைந்து வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் ஏற்கனவே திட்டமிட்டபடி நந்தகோபாலை தான், கத்தியால் முதுகில் கிழித்ததாகவும், அதன்பிறகு நந்தகோபால் தனது இரண்டு கைகளிலும் வெட்டுக்காயத்தை ஏற்படுத்திக்கொண்டு அந்த காயத்தை மாற்று மதத்தினர் மற்றும் காவி வேட்டி கட்டியவர்கள் ஏற்படுத்தியதாகவும், பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தி சட்டம், ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும் என்றும், கட்சியில் பதவி பெற நினைத்தும் இந்த செயலை நந்தகோபால் செய்ததாக ருத்ரமூர்த்தி கூறியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, திருப்பூர் போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு, பத்திரிகை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தாசில்தார் பாபு, ருத்ரமூர்த்தியை பெருமாநல்லூர் போலீஸ் நிலையத்தில் ஆஜர்படுத்தினார். அதன்பிறகு இந்த வழக்கின் சட்டப்பிரிவுகளில் மாற்றம் செய்து ருத்ரமூர்த்தி, நந்தகோபால் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.