சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பாடல் பாடியதாக கானா பாடகி இசைவாணி மற்றும் நிகழ்ச்சியை நடத்திய நீலம் அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க கோரி இந்து மக்கள் கட்சி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது.
கானா பாடகி இசைவாணி ‘ஐ யம் சாரி ஐயப்பா’ என்ற தலைப்பில் ஒரு பாடல் பாடியிருந்தார். இந்தப் பாடல் பா.ரஞ்சித் தலைமையிலான நீலம் கலாச்சார மையம் சார்பில் வெளியிடப்பட்டது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலையில் மகரவிளக்கு, மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், இந்த பாடல் தற்போது சர்ச்சையாகி உள்ளது. இந்தப் பாடலை எதிர்த்து காவல் நிலையத்தில் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இந்து மக்கள் கட்சியின் மகளிர் அணி மாநில தலைவர் சுசிலா தேவி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் பலகோடி மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட சபரிமலை ஐயப்பன் சுவாமி குறித்து, சமீபத்தில் மக்கள் உணர்வை புண்படுத்தும் வகையிலான ஒரு பாடல் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்த பாடலை இயக்குநர் பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்திய நிகழ்ச்சியில் கானா பாடகி இசைவாணி பாடியுள்ளார். கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனங்களைப் புன்படுத்தும் வகையில் மட்டுமில்லாமல், சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையிலும் பாடல் வரிகளை பயன்படுத்தி உள்ளனர்.
இந்த பாடல் மக்களிடையே வெறுப்புணர்வையும் கலவரத்தையும் ஏற்படுத்தும் வகையில் உள்ளதாலும், தமிழ்நாடு மட்டுமல்லாமல், இந்தியா முழுவதும் உள்ள ஐயப்ப சுவாமி பக்தர்கள் மனங்களையும், ஐயப்ப சுவாமி மீது பக்தி கொண்ட பெண்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் வகையில் உள்ளது.
எனவே, இந்த விவகாரத்தில், உடனே தலையிட்டு, பாடலையும் மற்றும் நீலம் அமைப்பையும் தடை செய்ய வேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் நீலம் பண்பாட்டு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஐ யம் சாரி ஐயப்பா (I am sorry Iyyappa) என்கிற பாடல் ஆண்டாண்டு காலமாய் இங்கு பேசப்பட்டு வரும் கோயில் நுழைவு உரிமையைக் கோருகிற வரிகளோடு துவங்கி, பின் பெண்களின் சுதந்திரத்தைப் பறிக்கும் பொதுவான உரிமைகளைக் கோரும் பாடலாக அமையப்பெற்றது. இப்பாடலை பாடியது இசைவாணி, எழுதி இசையமைத்தது ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்’ (The Casteless Collective) இசைக்குழு. 2018 ஆம் ஆண்டு 'மெட்ராஸ் மேடை' என்கிற இசை நிகழ்வில் அறிமுகப்படுத்திய பாடலை தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ் இசைக்குழு, அதற்குப் பின்னால் பல்வேறு மேடைகளில் பாடல்களைப் பாடி வருகிறது. ஏறத்தாழ ஆறு ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டு, இசைவாணியால் பல்வேறு மேடைகளில் பாடப்பட்ட பாடலின் முதல் வரியை மட்டும் எடுத்துக் கொண்டு கடந்த ஒரு வார காலமாகச் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகிறது ஒரு குழு.
அடிப்படையில் அது ஐயப்பன் சம்மந்தப்பட்ட பாடலே அல்ல. பெண்களின் பல்வேறு உரிமைகளைக் கோரும் வரிகளில் கோயில் நுழைவைக் கோரும் உரிமையும் அதில் இடம்பெற்றிருந்தது. இந்த முழு உண்மையை மறைத்து, அந்த மொத்தப் பாடலும் குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு எதிரானதாக இருக்கிறது என, சமூக வலைதளத்தில் பொய் செய்தியைப் பரப்ப முயற்சிப்பதின் மூலம், சமூகப் பதற்றத்தை உருவாக்கி விட முடியும் என முயல்கிறது ஒரு கூட்டம். கடந்த ஒரு வார காலமாக பாடகர் இசைவாணியை ஆபாசமாகச் சித்திரித்தும், தொலைபேசியில் மிரட்டியும், சமூகவலைதளத்தில் அவதூறுகளைப் பரப்பியும் வருகின்றனர். ஒரு கலைஞர் மீது வைக்கப்படும் குறி என்பது தனிநபர் சம்மந்தப்பட்டது கிடையாது. அந்த மிரட்டல் இனி உருவாகி வரவிருக்கும் கலைஞர்களுக்கும் சேர்த்தே என்பதுதான்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் சம்மந்தப்பட்டவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் சென்னை மாநகர காவல்துறை உரிய நடவடிக்கைக்கு எடுக்கும் என நம்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.