Advertisment

ராம கோபாலன் சுதந்திரப் போராட்ட வீரரா? முதல்வர் அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

சங்பரிவார் அமைப்பினர் யாரும் அவரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடவில்லை. தங்களது அஞ்சலிக் குறிப்பில் மட்டுமே அப்படி உள்ளது.

author-image
WebDesk
Oct 01, 2020 16:59 IST
ராம கோபாலன் சுதந்திரப் போராட்ட வீரரா? முதல்வர் அறிக்கைக்கு மார்க்சிஸ்ட் எதிர்ப்பு

இந்து முன்னணி தலைவர் ராமகோபாலனை சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்தவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரும், அந்தக் கட்சியின் ஊடக தொடர்பாளருமான கனகராஜ் எழுதியிருக்கும் திறந்த மடலில் கூறியிருப்பதாவது:

மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி திரு. Edappadi K Palaniswami அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்...

முதலமைச்சர் பொறுப்பிலிருக்கும் தங்களுக்கு ஆயிரம் வேலைகள் ஒவ்வொரு நொடியிலும் காத்திருக்கும். எனவே, தங்கள் வேலைகளை துறை வாரியாக பகிர்ந்தளித்திருப்பீர்கள். அது தவிர்க்க முடியாதது. அதேசமயம் உங்கள் பெயருடன் வரும் அறிக்கைகள் அனைத்திற்கும் தாங்களே பொறுப்பாவீர்கள்.

நேற்றைய தினம் இந்து முன்னணியின் நிறுவனர் ராமகோபாலன் அவர்கள் காலமானதையொட்டி தாங்கள் அஞ்சலி ஒன்றை வெளியிட்டிருந்தீர்கள். அந்த அஞ்சலிக் குறிப்பில் அவர் சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதாக தெரிவித்து இருக்கிறீர்கள். வரலாறு அறிந்த வரையில் இது முற்றிலும் தவறான செய்தி.

சங்பரிவார் அமைப்பின் பல்வேறு தரப்பினர் இதுபோன்று தங்கள் தலைவர்கள் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டதாக பொய்யாக புனைந்து வலிய திணித்த பல தருணங்கள் உண்டு. அத்தகைய தருணங்களில் எல்லாம் உண்மையின்பால் மட்டும் நேசம் கொண்டவர்கள் அதை சுட்டிக்காட்டி சரி செய்திருக்கிறார்கள்.

உண்மையைச் சொல்லப்போனால் சங்பரிவார் அமைப்பின் தலைவர்களில் ஒருவரான முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்கள் தன்னை ஒரு விடுதலைப் போராட்ட வீரராக காட்டிக் கொள்ள புனைந்து கதைகள் எழுதியதையும், அதை இந்து குழுமத்திலிருந்து வெளிவரும் பிரண்ட்லைன் ஏடு தவறென்று சுட்டிக் காட்டியதையும், அவர் மிகுந்த கோபத்தோடு அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியதையும் தங்களுக்கு கிடைத்த வரலாற்று ஆதாரங்களிலிருந்து முன்வைப்பதாக கூறி உறுதியாக நின்றதையும், அதன் காரணமாக வாஜ்பாய் தனது வக்கீல் நோட்டீசை திரும்பப் பெற்றுக் கொண்டதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.

மிக உயர்ந்த பொறுப்பிலிருந்த ஒருவரே தன்னை விடுதலைப் போராட்ட வீரர் என்று மார்தட்டிக் கொண்டதையும் அது உண்மையல்ல என்பதையும் நாடு அறிந்து கொண்டது. நானறிந்த வரையில் ராமகோபாலன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்திய சங்பரிவார் அமைப்பினர் யாரும் அவரை சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் குறிப்பிடவில்லை. தங்களது அஞ்சலிக் குறிப்பில் மட்டுமே அப்படி உள்ளது.

சாதாரணமாக இது கடந்து போகக் கூடிய ஒரு தவறுதான். ஆனால், சங்பரிவாரைப் பொறுத்தமட்டில் அவர்கள் மக்கள் நலனுக்கான போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை. கலந்து கொண்டதாகச் சொன்னால் வாக்கு கிடைக்குமென்றால் அதற்கென ஒரு 'வரலாறை' உருவாக்குவார்கள். அதன் ஒரு முயற்சியே உங்கள் பெயரில் வெளியிடப்பட்ட இரங்கல் செய்தி என்று நான் கருதுகிறேன்.

அதாவது இப்போது தமிழகத்தின் மிக உயர்ந்த பொறுப்பிலுள்ள ஒருவரின் இரங்கல் செய்தியில் இதை பதிவு செய்வதன் மூலம் எதிர்காலத்தில் அன்றையை முதலமைச்சரே அப்படி சொல்லியிருக்கிறார். அவர் ஆவணங்களை எல்லாம் பரிசீலிக்காமல் சொல்லியிருக்கமாட்டார். எனவே, எங்கள் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரர்தான் என்று சொல்லிக் கொள்வதற்கான புனைவின் தொடக்கத்தை இங்கு துவக்கி வைக்கிறார்கள் என்றே கருதுகிறேன்.

தமிழகத்தில் இது ஒன்றும் நடக்காதது அல்ல. நிர்வாகத்தின் பல அடுக்குகளிலும் சங்பரிவார் தனது ஆட்களை ஊடுருவ வைத்திருக்கிறது என்பது பரவலாக பகிரப்படும் ரகசிய செய்தியாகவே இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் தங்களுக்கு புகாரளித்துள்ளதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். (ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் மிட்டல் வெளிப்படையாக ஆர்.எஸ்.எஸ் ஆதரவு நிலைப்பாட்டில் தனது சமூக வலைதளங்களில் இயங்குவது குறித்து தோழர் பாலகிருஷ்ணன் புகார் அளித்தது தொடர்பான தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் பதிவை இணைத்திருக்கிறார்)

எனவே, இந்த செய்தியை எழுதிக் கொடுத்தவர் எந்த ஆதாரத்திலிருந்து எழுதினார் என்பதையும், அப்படி ஆதாரமில்லாமல் எழுதியிருந்தால் எழுதப்பட்ட நோக்கத்தையும் அவரது அரசியல் பின்புலம் பற்றி உரிய முறையில் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இந்தச் செய்தி தவறான நோக்கத்திலிருந்தும் ஆதாரம் இன்றியும் வெளியிடப்பட்டிருப்பின் உரிய திருத்தத்தை வெளியிட்டு தவறை சரி செய்யக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கனகராஜ் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

 

 

#Cpm #Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment