தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களின் நில உரிமை ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. திருக்கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் 4,78,272 ஏக்கர் ஆகும். முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலம் தொடர்பான விவரங்களை அறநிலையத்துறை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், இந்து சமய அறநிலையத்துறையின் கீழுள்ள கோயில்களின் 70% கோயில்களின் சொத்துகள் இதில் அடங்கும். தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்களின் நில உரிமை ஆவணங்களைச் சரிபார்க்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
திருக்கோயில் நிலங்களின் உரிமை ஆவணங்கள் வருவாய்த் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள "தமிழ்நிலம்" மென்பொருளோடு ஒப்பீடு செய்யப்பட்டு முழுவதும் ஒத்துப்போகும் இனங்கள், பகுதியாக ஒத்துப்போகும் இனங்கள் மற்றும் புதிய இனங்கள் என மூன்று இனங்களாக வகைப்படுத்தப்பட்டு உள்ளன. கோயில்களுக்கு சொந்தமான அனைத்து நிலங்களின் தலைப்பு பத்திரங்களும் சம்பந்தப்பட்ட கோயில்களின் பெயரில் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
முதற்கட்டமாக வெளியிடப்பட்ட 3 லட்சத்து 43 ஆயிரத்து 647 ஏக்கர் நிலங்கள் முழுவதும் ஒத்துப்போகும் இனங்களாக கண்டறியப்பட்டு அந்நிலங்களின் 'அ' பதிவேடு நகர நில அளவை பதிவேடு சிட்டா போன்றவை பொதுமக்கள் பார்வையிடும் வகையில் www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களுக்கு சொந்தமான சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் டிஜிட்டல் மயமாக்குவது கடந்த மாதம் தொடங்கியது. அரசின் கட்டுப்பாட்டில் இந்து கோயில்கள் இருப்பதால் அவை முறையான பராமரிப்பின்றி இருப்பதாக கூறி பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் ஆன்மிக குரு ஜக்கி வாசுதேவ் உள்ளிட்டோர் இந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை முன்னெடுத்த நிலையில், கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றி பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற முடிவை புதிதாக பொறுப்பேற்றுள்ள திமுக அரசு எடுத்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"