/indian-express-tamil/media/media_files/2025/10/15/hitachi-energy-chennai-investment-2025-10-15-20-18-56.jpg)
ரூ.2,000 கோடி முதலீடு, 3,000 பேருக்கு வேலை வாய்ப்பு... ஹிட்டாச்சி நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த உலகளாவிய பார்ச்சூன் 500 நிறுவனமான ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், தனது உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை சென்னையில் விரிவாக்கம் செய்யவுள்ளது. இந்த விரிவாக்கத் திட்டத்தின் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி முதலீடு, 3,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் வகையில், தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
ஹிட்டாச்சி எனர்ஜி டெக்னாலஜி சர்வீசஸ் நிறுவனத்தின் உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை, கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை, போரூரில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது. அதன் தொடர்ச்சியாக தற்போது இந்த விரிவாக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட இந்நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தொழில் முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், தொழில் முதலீட்டு ஊக்குப்பு மற்றும் வர்த்தகத்துறை செயலாளர் வி. அருண் ராய், ஹிட்டாச்சி நிறுவனத்தின் உலகளாவிய தலைமைச் செயல் அலுவலர் ஆண்ட்ரியாஸ் ஷீரன்பெக், ஹிட்டாச்சி இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வேணு நுகரி, மற்றும் அந்நிறுவனத்தின் உயர் அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த முதலீட்டு விரிவாக்கமானது, தமிழகத்தில் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.