தமிழ்நாட்டில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மூடப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்ததையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் 1ஆம் தேதியில் இருந்து 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து 1முதல் 8ஆம் வகுப்பு வரை என அனைவருக்கும் நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் தொடங்கியது.
படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மாணவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பி தொடங்கினர். ஜனவரி முதல் சுழற்சி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, அனைவரும் பள்ளிக்கு வந்து கல்வி கற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஒமிக்ரான் தொற்று அதிவேகமாக பரவ தொடங்கியுள்ளது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது வரை 34 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஒமிக்ரான் தொற்று அதிகரித்தால் மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் கட்டுப்பாடுகளை விதிக்க மாநில அரசுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில், ஒமிக்ரான் பரவலை சுட்டிக்காட்டி, பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மருத்துவர்கள் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசுக்கு மருத்துவர்கள் சங்கத்தில் தலைவர் செந்தில் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "ஒமிக்ரான் தொற்று தமிழகத்தில் அதிகரிக்கும் நிலையில் அதைத் தடுப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
கோயில் திருவிழாக்கள், திரையரங்குகள், பொதுக்கூட்டங்கள், திருமண விழா மற்றும் துக்க நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகம் கூடுவதைத் தடுக்க வேண்டும்.
அதேபோல், ஒமிக்ரான் மாறுபாடு மற்ற மாறுபடுகளுடன் ஒப்பிடுகையில், நான்கு மடங்கு வேகமாக பரவக்கூடியது என்பதால், ஆன்லைன் வகுப்புக்கு மீண்டும் செல்வது நல்லது. இதான் பரவலை தடுப்பதற்கான சரியான நிலை.
ஏனென்றால், பள்ளி, கல்லூரிகளில் ஒமிக்ரான் பரவ தொடங்கினால், அதனை கட்டுப்படுத்திட முடியாது. மருத்துவமனையில் நிரம்பி வழிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இரண்டாம் அலையின் தாக்கம் மீண்டும் ஏற்படக்கூடாது. பள்ளி, கல்லூரிகளை மூடுவது போல், மாஸ்க் அணிவதையும் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.