அதிகனமழை காரணமாக பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் இன்று(டிச.19) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் மழையால் பாதிக்கப்பட்டுள்ள தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை, தென்காசி, தூத்துகுடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத கனமழை பெய்து வருகிறது. இதனால், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சாலைகள் சேதம் அடைந்துள்ளன.
நெல்லை நகரம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் என பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நிர்வாகம் மீட்பு பணிகளையும் நிவாரணப் பணிகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அதிகனமழை காரணமாக, பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நெல்லை, தூத்துக்குடி ஆகிய 2 மாவட்டங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் அனைத்துக்கும் செவ்வாய்க்கிழமை (19.12.2023) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“