கனமழை காரணமாக சென்னை உள்பட ஐந்து மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது. கடந்த 30தேதி சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்தது. சென்னையில் காலை முதலே கொட்டி தீர்த்த மழை காரணமாக்க நகரம் முழுவதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலைகளில் நீர் தேங்கியது.
வடசென்னையில் பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கொளத்தூர் ஏரி கரையை உடைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் முயற்சி எடுத்தனர். இதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வியாசர்பாடி, மாதவரம் போன்ற பகுதிகளில் வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
தென் சென்னை பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. குரோம்பேட்டை காவல் நிலையம் முன்பு இரண்ட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. வேளச்சேரி, சிட்லபாக்கம் பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதனிடையே பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘அமெரிக்கா, லண்டனை விட குறைவாகவே சென்னையில் தண்ணீர் தேங்கியுள்ளது’ என தெரிவித்தார். இது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டது.
இந்நிலையில் வரும் 2ம் தேதி வரையில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததால், 31ம் தேதி சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்பட 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்க்கு விடுமுறை வழங்கப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் பல இடங்களில் மழை பெய்யவில்லை. ஆனாலும் வானிலை ஆய்வு மையம் சென்னையிலும் கடலோர மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக, மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் 7 தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டுமே விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, பண்ருட்டி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.