tirunelveli | tuticorin | தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்தது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்தது. இதனால் சாலை, வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. திரும்பும் திசை எல்லாம் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பல்வேறு குளங்கள் நிரம்பி மதகு திறக்கப்பட்டுள்ளது.
வயல்காடுகள், நீர் நிலைகளில் மழை நீர் தேங்கி காணப்படுகிறது. தோட்டங்களில் உள்ள தென்னை மரங்கள் உள்ளிட்ட பயிர்களும் நீரில் மூழகியுள்ளன. திருநெல்வேலி ஜங்ஷன், மேலப்பாளையம், களக்காடு, செட்டிக்குளம் மற்றும் கூடங்குளம் பகுதிகளில் அதிகளவு மழை நீர் தேங்கி காணப்பட்டது.
இந்த மழை நீரை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், இன்று (டிச.20) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், கனமழை எச்சரிக்கை காரணமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச.20) விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளி, கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொது துறை நிறுவனங்களுக்கு இன்று ஒரு நாள் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்விடுமுறையை ஈடு செய்ய வரும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்படும் என தூத்துக்குடி ஆட்சியர் அறிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“