சென்னையில், திருமணமான பெண் எஸ்.ஐ. ஒருவரை ஒருதலையாகக் காதலித்து, சாலையில் வைத்து வலுக்கட்டாயமாக தாலி கட்ட முயற்சித்ததாக ஊர்காவல் படை காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக மணிமேகலை என்பவர் பணியாற்றி வருகிறார். இவர், வேலூர் காட்பாடியில் பயிற்சி உதவி ஆய்வாளராக பணியாற்றிய போது அந்த காவல் நிலையத்தில் ஊர்காவல் படை காவலராக பணிபுரிந்த பாலச்சந்திரன் என்பவருடன் அலுவல் ரீதியாகவும், நட்பாகவும் பழகியதாகக் கூறப்படுகிறது. பாலச்சந்திரன் இதை தவறாக புரிந்து கொண்டு உதவி ஆய்வாளர் மணிமேகலையை ஒருதலையாகக் காதலித்ததாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் உதவி ஆய்வாளர் மணிமேகலைக்கு திருமணமான பின்பும் தனது ஒரு தலைக் காதலை விடாமல் பாலச்சந்திரன் தொந்தரவு செய்து வந்ததாக தெரிகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு போன் செய்த பாலச்சந்திரன், மணிமேகலையிடம் "என்னை திருமணம் செய்து கொள். இல்லை என்றால் உன் கணவரையும், குழந்தையையும் கொன்று விடுவேன்" என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதற்கு ஒரு முடிவு கட்ட, பாலச்சந்திரனை நேரில் வரச் சொல்லி எச்சரிக்கை செய்து அனுப்ப திட்டமிட்ட மணிமேகலை, சென்னைக்கு அவரை வரவழைத்திருக்கிறார். அப்போது, பேசிக் கொண்டிருந்த போதே, மணிமேகலையின் கழுத்தில் கத்தியை வைத்து சினிமா பாணியில் வலுக்கட்டாயமாக தாலி கட்ட பாலச்சந்திரன் முயற்சி செய்ததாக தெரிகிறது.
இதையடுத்து, பேச்சுவார்த்தைக்கு உடன் வந்த சிறப்பு உதவி ஆய்வாளர் குணசேகரன், பாலச்சந்திரனை பொதுமக்கள் உதவியுடன் பிடித்து எழும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். பின்னர் சம்பவம் குறித்து உதவி ஆய்வாளர் மணிமேகலை எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் ஊர்காவல் படையை சேர்ந்த பாலச்சந்திரன் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டம், ஐபிசி 294(பி), 323, 506(2) ஆகிய 4 பிரிவுகளின் கீழ் கைது செய்தனர்.
மேலும், பாலச்சந்திரனிடம் இருந்து கொலை செய்யும் நோக்கில் கொண்டு வந்த ஒரு அடி நீள கத்தி, திருமணம் செய்து கொள்வதற்காக கொண்டு வந்த இரண்டு மோதிரம், தாலி கயிறு, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.