பச்சிளம் குழந்தையை, பெற்ற தாய்க்கே தெரியாமல் விற்று அதில் வந்த பணத்தில் மொபைல்போன் வாங்கிய "பாசக்கார" தந்தையின் செயல், அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் ஆறுமுகம்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி இயேசுஇருதயராஜ். இவரது மனைவி புஷ்பலதா. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ள நிலையில், கடந்த 8ம் தேதி, புஷ்பலதாவுக்கு ஒரு ஆண் - பெண் என இரட்டைக்குழந்தை பிறந்தது.
ஏற்கனவே, பெண் குழந்தை உள்ளதால், மற்றொரு பெண் குழந்தையை விரும்பாத இயேசுஇருதயராஜ், பெண் பச்சிளம்குழந்தையை விற்க திட்டமிட்டார். இதற்காக அவர் அப்பகுதியில் உள்ள சிலரை நாடினார். அவர்களின் மூலம், இயேசுஇருதயராஜிற்கு, குழந்தையில்லாத தம்பதியின் அறிமுகம் கிடைத்தது. அவர்களிடம் பெண் குழந்தையை விற்பது என முடிவானது. அவர்கள் அந்த குழந்தைக்கு விலையாக ரூ.1,80,000 தர ஒப்புக்கொண்டனர்.
அந்த ரூ.1,80,000ல், குழந்தையில்லாத தம்பதியின் அறிமுகம் கிடைக்க காரணமாக இருந்த மூன்று பேருக்கு ரூ.80 ஆயிரம் தர இயேசுஇருதயராஜ் ஒப்புக்கொண்டார். அதேபோல், பணத்தையும் அவர்களுக்கு வழங்கிவிட்டார். தனக்கு கிடைத்த ரூ.1 லட்சம் பணத்தில் ஒரு மொபைல்போன், ஆண் குழந்தைக்கு தங்க சங்கிலி உள்ளிட்டவைகளை வாங்கிவந்தார்.
ஏது பணம் என்று மனைவி புஷ்பலதா கேட்டதற்கு, மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிளை அடமானம் வைத்துவிட்டதாக இயேசுஇருதயராஜ் தெரிவித்திருந்தார். பின் அவர் வெளியே சென்றுவிட்டார்.
பிறந்த இரட்டை குழந்தைகளில், பெண் குழந்தை காணாமல் போயிருந்ததை கண்டு திடுக்கிட்ட புஷ்பலதா, நர்சிடம் வாக்குவாதம் செய்தார். மருத்துவமனையில் இருந்த சைல்டு ஹெல்ப்லைன் பிரிவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
ஆறுமுகம்பட்டி போலீசார் நடத்திய விசாரணையில், இயேசுஇருதயராஜ், பச்சிளம் குழந்தையை விற்றதை ஒப்புக்கொண்டார். இயேசு இருதயராஜ் மற்றும் குழந்தை விற்பனைக்கு காரணமாக இருந்த அந்த மூன்று பேர் மீது இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 363, 120பி, 420 மற்றும் 147 பிரிவுகளின் கீழும், குழந்தைகள் பாதுகாப்பு சட்டப்பிரிவுகளான 80 மற்றும் 81 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
குழந்தையில்லா தம்பதியிடமிருந்து மீட்கப்பட்ட குழந்தை, தற்போது குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. போலீசார், இயேசுஇருதயராஜ் உள்ளிட்டோரிடம் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.