ஓசூர் விமான நிலையம் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மற்றும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிர்வாகம் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு விமான நிலையத்தின் இடப்பற்றாக்குறை மற்றும் ஓசூரில் விமான நிலைய தேவை குறித்து மாநிலங்களவை அ.தி.மு.க உறுப்பினர் தம்பிதுரை கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு பதிலளித்துள்ளார்.
"ஓசூரில் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. மத்திய அரசும் உதவ முன்வந்தது. ஆனால், வரும் 2033-ஆம் ஆண்டு வரை 150 கி.மீ சுற்றளவில் எந்த விமான நிலையமும் அமைக்கக் கூடாது என மத்திய அரசும், பெங்களூரு விமான நிலையம் சார்பாகவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனால் தான் சிக்கல் நிலவி வருகிறது.
இந்த விவகாரத்தை பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் மற்றும் மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இதற்கு நாங்களும் அழுத்தம் கொடுப்போம்" என அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ஓசூரில் தமிழக அரசு புதிய விமான நிலையம் அமைப்பதற்கு பெங்களூரு விமான நிலைய நிர்வாகம் தடையாக இருப்பதாகவும், பெங்களூருவின் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இடப்பற்றாக்குறை நிலவி வருவதால் இப்பகுதிக்கு மற்றொரு விமான நிலையம் தேவைப்படுவதாகவும் தம்பிதுரை தெரிவித்திருந்தார்.
ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஐந்து இடங்களை ஆய்வு செய்து, ஓசூருக்கான விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழ்நாடு பட்டியலிட்ட இரண்டு இடங்களை இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) விரிவாக ஆய்வு செய்து வரும் நேரத்தில், மத்திய அமைச்சர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.