ஒசூர் முதல் பெங்களூருவில் உள்ள பொம்மசந்திரா வரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாக குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் நேரில் சென்று செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 27) ஆய்வு செய்தனர். இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி மற்றும் தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்தபடி, அத்திபள்ளி வழியாக ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை விரைவான போக்குவரத்து அமைப்பை (MRTS) அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு ஆய்வு அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இந்த விரிவான சாத்தியக்கூறு அறிக்கையை இறுதி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எம்.ஏ. சித்திக் செவ்வாய்க்கிழமை (27.08.2024) பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எம். மகேஷ்வர் ராவை பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து, ஓசூர் முதல் பொம்மசந்திரா வரை உள்ள மெட்ரோ பாதையின் முக்கிய அம்சங்களைப் பற்றி ஆலோசனை நடத்தினார்.
இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் தி. அர்ச்சுனன், தலைமை பொது மேலாளர் டி.லிவிங்ஸ்டோன் எலியாசர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் ஆர்.கே.ரெட்டி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பெங்களூர் மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் ஆலோசகர்கள் (M/s Balaji Railroad Systems Private Limited JV மற்றும் Habog Consultants Private Limited) ) கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் குழுவினர் மற்றும் ஆலோசகர்கள் ஒசூர் பகுதிகளை நேரடியாக பார்வையிட்டு, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் கே. சரயு மற்றும் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் எச்.எஸ். ஸ்ரீகாந்த், ஒசூர் துணை கலெக்டர் பிரியங்கா ஆகியோரை சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.
அத்திபள்ளி வழியாக பொம்மசந்திரா முதல் ஒசூர் வரை மொத்தம் தோராயமாக 23 கி.மீ. நீளத்திற்கு தமிழ்நாட்டில் 11 கி.மீ மற்றும் கர்நாடகாவில் 12 கி.மீ நீளம் கொண்ட இந்த பாதை 12 மெட்ரோ ரயில் நிலையங்கள் மற்றும் ஒரு பணிமனையை உள்ளடக்கியதாக அமையும் இந்த கூட்டத்தில் விரைவான போக்குவரத்து அமைப்பை செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் ஆய்வு செய்யப்பட்டன. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஒசூர் மற்றும் பெங்களுரு இடையேயான போக்குவரத்து இணைப்பு மேம்ப்படுத்தப்படும்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.