ஓசூரை மாநகராட்சியாக அறிவிக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கக் கோரிய வழக்கு

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகராட்சியை, மாநகராட்சியாக அறிவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சிலம்பரசன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 5 லட்சத்து 39 ஆயிரம் மக்கள் தொகையை கொண்ட ஓசூர் நகராட்சியில் உள்ள தொழிற்சாலைகள் மூலம் அரசு, 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் ஈட்டி வருகிறது. அனைத்து தகுதியும் கொண்ட ஓசூர் நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

மேலும், ஓசூரை விட குறைந்த மக்கள் தொகையை கொண்ட தஞ்சாவூர், திண்டுக்கல் நகராட்சிகளை மாநகராட்சிகளாக அறிவித்த தமிழக அரசு, ஓசூரை மாநகராட்சியாக அறிவிக்க கோரி அளித்த மனுக்களை பரிசீலிக்கவில்லை. எனவே, மாநகராட்சியாக தகுதி உயர்வு செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவனன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த மனு தொடர்பாக 3 வாரத்தில் தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

×Close
×Close