கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த உத்னப்பள்ளி அருகே கூஸ்தனப்பள்ளியில் இயங்கிவரும் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் டாடா எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி புரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தொழிற்சாலையின் ஆலோ பிளான்ட் ரசாயன பகுதியில் திடீரென இன்று சனிக்கிழமை காலையில் தீ பற்றியது. அந்தப் பகுதியில் இருந்த தீயணைப்பு கருவியை கொண்டு முதல் கட்டமாக தீயை அணைக்க முற்பட்டுள்ளனர். ஆனால், ரசாயன பகுதி என்பதால் தீ மளமளவென பரவியது. தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில், தேன்கனிக்கோட்டை மற்றும் ஓசூர் தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு தகவல் அளித்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.தீயானது ரசாயன பகுதியில் ஏற்பட்டுள்ளதால், தொழிற்சாலையில் இருந்து அதிகளவில் கரும்புகை வெளியேறி வருவதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது.
தொடர்ந்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஓசூர் தீயணைப்புத் துறையினர் கூட்டாக இணைந்து செயல்பட்டு வருகின்றனர். தொழிலாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரத் துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்தப் பகுதியில் மின்சாரத்தை துண்டித்து உள்ளனர். காலை நேரத்தில் தீ விபத்து சம்பவம் நிகழ்ந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, பத்தாயிரம் பேர் பணியாற்றும் செல்போன் ஆலை முறையான அனுமதி பெறாமல் சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் இயங்கி வந்ததாக தற்போது அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த செல்போன் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் அது தொடர்பாக சமூக ஆர்வலர் தொடர்ந்த வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“