ஒசூர்- கர்நாடகா எல்லையில் பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் முதல் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரு – ஓசூர் இடையே அமைந்துள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் பட்டாசுக்கடை ஒன்று இயக்கி வந்தது. விரைவில் தீபாவளி பண்டிகை வர உள்ளதால் பட்டாசு வியாபாரம் அதிகரித்து வந்த நிலையில், இந்த கடையில் நேற்று மாலை தொழிலாளர்கள் வாகனத்தில் இருந்து பட்டாசு பெட்டிகளை இறக்கும்போது எதிர்பாராத விதமாக தீப்பிடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.
மாலை 4 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ உடனே மளமளவென பரவி அருகில் இருந்த 4 கடைகளிலும் தீப்பிடித்தது, இந்த விபத்தில் கடைசியில் இருந்த சுமார் ஒரு கோடி மதிப்பிலான பட்டாசுகள் வெடித்து சிதறிய நிலையில், கடைக்கு அருகில் இருந்த 2 வாகனங்களும் தீப்பிடித்து சேதமடைந்தது. தேசிய நெடுஞ்சாலைக்கு அருகிலேயே இந்த விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் சிலமணி நேரங்கள் போக்குவரத்து பாதிக்கப்ட்டது.
மேலும் இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், பட்டாசுக்கடையில் பணியாற்றிய ஊழியர்கள் பலரும் விபத்தில் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. விபத்து நடந்த போது 20 பேர் கிடங்கில் பணியாற்றி வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பட்டாசுக்கடையின் அருகில் இருந்த 2 மதுபானக்கடை மற்றும் ஒரு டீக்கடையும் சேதமடைந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“