ஊரடங்கு நேரத்தில் உணவுக்காக ஏழைகள் கஷ்டப்படுவதால் குறைந்த விலையில் பார்சல் உணவுகளை விற்பனை செய்யுமாறு ஓட்டல்களுக்கு உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisment
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவும், 144 தடை உத்தரவும் அமலில் உள்ளதால் ஓட்டல்களில் பார்சல் மூலம் மட்டுமே உணவுகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரிசெய்ய பார்சல் உணவுகளின் விலையை உயர்த்தி விற்பனை செய்வதாக குற்றச்சாட்டுகள் கிளம்பின.
இதுதொடர்பாக வழக்கறிஞர் ராம. சிவசங்கர் தாக்கல் செய்துள்ள மனுவில், ஓட்டல்களையே நம்பி வாழும் இளைஞர்களுக்கும், குடும்பத்தினருக்கும் விலையேற்றம் கூடுதல் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளதால்,
இது குறித்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்க கோரி ஏப்ரல் 12ஆம் தேதி தமிழக அரசுக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையோ, பதிலோ இல்லை என குறிப்பிட்டுள்ளார். அதனடிப்படையில், ஓட்டல்களில் குறைந்த விலையில் பார்சல்களை விற்பனை செய்வதை முறைபடுத்துமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். அதேபோல ஓட்டல்களின் அருகில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக உணவுகளை வழங்க வேண்டுமென் அறிவுறுத்தல் வழங்கவும் அரசுக்கு உத்தரவிட கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் சத்யநாராயணன், நிர்மல்குமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”