சென்னை கிண்டியில் கலைஞர் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், புற்றுநோய் துறையில் பாலாஜி ஜெகன்நாதன் என்பவர் மருத்துவராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என கூறி, மருத்துவர் பாலாஜியை, விக்னேஷ் என்ற இளைஞர் உள்பட 4 பேர் கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், அரசு மருத்துவர் மீதான இந்த கத்திக்குத்து சம்பவம் எப்படி அரங்கேறியது என்பது குறித்து இங்கு சுருக்கமாகப் பார்க்கலாம்.
புற்றுநோய் மருத்துவர் பாலாஜி ஜெகன்நாதன், வழக்கம் போல் இன்று கிண்டி கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனைக்கு பணிக்கு சென்றுள்ளார். அப்போது, தாயாருக்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என விக்னேஷ் என்பவர் பணியில் இருந்த மருத்துவர் பாலாஜியின் கழுத்து காதின் பின்புறம், நெற்றி, முதுகு உள்ளிட்ட 7 இடங்களில் கத்தியால் குத்தியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது மயக்க நிலையில் உள்ளார். மருத்துவர் பாலாஜி இதய நோயாளி என்பதால், 8 மணி நேரத்திற்கு பிறகு அவரின் நிலை குறித்து தெரிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மருத்துவர் பாலாஜியை தாக்கிய விக்னேஷ அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விக்னேஷ் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக, தாக்குதல் சம்பவம் நடைபெற்ற இடத்தை பார்வையிட்ட சென்னை கமிஷனர் அருண் கூறியுள்ளார்.
இதற்கிடையில், மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். மருத்துவர் பாலாஜியை நேரில் பார்வையிட்டு ஆறுதல் கூறிய துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாக சுகாதார அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
மருத்துவர் பாலாஜி மீது கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்துக்கு எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலருமான எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க சார்பில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மருத்துவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.
இந்த சம்பவத்துக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை, தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்கள்.
இதனிடையே, மருத்துவர் பாலாஜி தாக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவர் சங்கங்கள் போராட்டம் அறிவித்தன. இதேபோல் கிண்டி மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களும், செவிலியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் மருத்துவர் சங்கங்களுடன் அரசு நடத்திய பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து கைதான விக்னேஷின் தாயார் பேசுகையில், "கடந்த மாதம் 14,15,16 தேதிகளில் சென்று சிகிச்சை பெற்றேன். தனியார் மருத்துவமனையில் என்னைக் காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டனர். காலை சென்ற எனக்கு மாலை வரை சிகிச்சை அளிக்கவில்லை. நான் பிழைப்பது கஷ்டம் எனக் கூறியதால் என் மகன் மன உளைச்சலில் இருந்தான். எனக்கு அளித்த சிகிச்சைகளை மருத்துவர் முறையாக கவனிக்கவில்லை. என்னை மிகவும் கஷ்டமான நிலையில் பார்த்ததால், இப்படி செய்தான என்று தெரியவில்லை." என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“