”தடியடி, தாக்குதல், ஒடுக்குமுறை”: பத்திரிக்கையாளர்களை எப்படி நடத்தினார் ஜெயலலிதா?

ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதிமுகவினர் ‘அம்மாவின் வழியில்’ எனக்கூறி அவர் கையாண்ட அனைத்து அடக்குமுறைகளையும் இன்று வரை ஏவிவருகின்றனர்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் இன்று. அதிமுகவினர் ‘அம்மாவின் வழியில்’ எனக்கூறி அவர் கையாண்ட அனைத்து அடக்குமுறைகளையும் இன்று வரை ஏவிவருகின்றனர். கார்ட்டூனிஸ்ட் பாலா, திருமுருகன் காந்தி, வளர்மதி, பேராசிரியர் ஜெயராமன் என, பல்வேறு சமூக பிரச்சனைகளில் தமிழக அரசின் அமைதியை கேள்வி எழுப்பியவர்களை, காவல் துறையின் மூலம் அடக்குமுறையை ஏவி கைது செய்தது எடப்பாடி அரசு.

அவர்களின் அடியையொற்றி வந்தவர்களே இப்படியென்றால், ஜெயலலிதா மற்றவர்களை நடத்திய விதம் நாம் அறியாததில்லை. குறிப்பாக, அவர் பத்திரிக்கையாளர்களை நடத்தியவிதம். தன்னை எதிர்ப்பவர்களை ஒடுக்குதல், அவதூறு வழக்கு தொடுத்தல் என ஜெயலலிதாவால், பல சிக்கல்களை சந்தித்த பத்திரிக்கையாளர்கள் ஏராளம்.

அப்படி, 2001-ஆம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியை அப்போதைய அதிமுக அரசு கைது செய்தபோது, அதனை செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை நினைவு கூறினார் பத்திரிக்கையாளர் ஜெயஸ்ரீ. அவர் அப்போது ஆங்கில தொலைக்காட்சி ஊடகமொன்றில் நிருபராக பணியாற்றி கொண்டிருந்தார்.

“கருணாநிதியின் கைதுக்கு இரண்டு நாட்களுக்கு, விழுப்புரம் மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் நடைபெற்ற முறைகேட்டை செய்தி சேகரித்த சன் தொலைக்காட்சி நிருபர் சுரேஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அப்போதைய அதிமுக அரசில் யார் வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற நிலைமை இருந்தது. அதற்கு மறுநாள், நிருபர் சுரேஷை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, பத்திரிக்கையாளர்கள் தலைமை செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலமைச்சர் வரும் வழியை கூட தடுக்க முற்பட்டனர். அப்போது, போலீசார் எங்கள் மீது கண்ணீர் புகை குண்டை வீசி தாக்குதல் நடத்தினர். 150க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்களை கைது செய்து பல மணிநேரம் வேப்பேரி காவல் நிலையத்தில் வைத்திருந்தனர். அத்தனை பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்படுவது பெரும் வரலாற்று நிகழ்வாக பார்க்கப்பட்டது”, என ஜெயலலிதா எதில் வரலாற்று சாதனை புரிந்தார் என்பதை நினைவு கூர்ந்தார்.

அன்றய நாள் இரவுதான் கருணாநிதி கைது செய்யப்படுகிறார். நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். “அவர் கைது செய்யப்பட்டதையும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையும் செய்தி சேகரிக்க பத்திரிக்கையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை”, என்கிறார் ஜெயஸ்ரீ.

கருணாநிதியின் கைதைக் கண்டித்து பல்வேறு இடங்களில் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். “டிஜிபி அலுவலகம் முன்பு திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுகவினர் உணர்ச்சிப்பெருக்கில் காவல் துறையினருக்கு எதிராக முழக்கமிட்டனர். அதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வன்முறையை கையாண்டனர். திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், அந்த இடத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. இதற்கிடையே, இந்த கலவரத்தில் வெளியாட்கள் சிலரும் கலவரத்தில் இணைந்துகொண்டனர்.”, என தெரிவித்தார் ஜெயஸ்ரீ.

இந்த கலவரங்களுக்கு இடையே அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்கள் சிக்கிக்கொண்டனர். அவர்களை வீடியோ எடுக்கவிடாமல் போலீசார் தடுத்ததாக கூறுகிறார் ஜெயஸ்ரீ. “இத்தகைய வன்முறை நடக்கும்போது ஊடகத்தால் வெளியிடப்படும் வீடியோ புகைப்படம் அனைத்தும் சாட்சியமாகிவிடும் என்பதால் செய்தியாளர்களை தடுக்க வேண்டும் என போலீசார் விரும்பினர்”, என தமிழக காவல் துறை எப்படி அரசின் அடிவருடியாக இருந்தது என்பதை விளக்கினார்.

“நான் அனைத்தையும் வீடியோவாக எடுத்திருந்தேன். ஆனால், போலீஸ் என் கேமராவை பிடுங்கி உடைத்துவிட்டனர். அதனாள், டிஜிபி அலுவலகத்திலிருந்து சற்று தள்ளி செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சக பத்திரிக்கையாளர் நண்பர்களை நான் செல்போனில் தொடர்புகொண்டேன். அப்போது, அத்தனை வன்முறையையும் போலீசார்தான் ஈடுபட்டனர் என்பதை அவர்கள் தெரிவித்தனர். அதன்பின், அங்கிருந்த போலீஸ் எங்களை பாதுகாப்பாக வெளியேற்றினார். எங்களை பாதுகாப்பது அவர்களுடைய நோக்கமா, அல்லது நாங்கள் அந்த கலவரத்தை செய்தியாக்கிவிட்டால் பிரச்சனை முற்றிவிடும் என்பதால் வெளியேற்றினார்களா என்பது தெரியவில்லை”, ஜெயஸ்ரீ.

அந்த கலவரத்தில் பல கார்களை போலீசார் அடித்து உடைத்ததாகவும், பத்திரிக்கையாளர்களை தாக்கியதாகவும், அந்த வன்முறை முழுவதையும் தங்களால் வீடியோ எடுக்க முடியவில்லை எனவும் ஜெயஸ்ரீ கூறினார்.

அச்சம்பவத்தின் சில பதிவுகளை சன் டிவி நிருபர் வீடியோவாக எடுத்திருந்தால், அவை அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது.

“அதன்பிறகு, வன்முறையில் பத்திரிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யவும், நீதி கோரியும் நீதிமன்றத்தை நாடினோம். சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தினோம். ஆனால், விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. கலவரத்தில் பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டதை அந்த விசாரணை கமிஷன் விசாரித்தது. அதன் பிறகு உடைக்கப்பட்ட கேமராவுக்கு நஷ்ட ஈடு வழங்கப்பட்டது”.

பத்திரிக்கையாளர்கள் மீது வன்முறையை ஏவிய மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் அரசியல் பாடம் கற்ற இபிஎஸ்களும், ஓபிஎஸ்களும், ஜல்லிக்கட்டு போராட்டம், மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டம், நெடுவாசல் போராட்டங்களில் பொதுமக்களையும், மாணவர்களையும் போலீஸ் தடியால் ஒடுக்காமல் வேறென்ன செய்வார்கள்?

×Close
×Close