வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கங்கள் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாரத் பந்த்துக்கு தொ.மு.ச. உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்கள் சார்பில் ஆதரவு அளிக்கப்பட்டது.
விவசாயசங்கங்கள் இன்று பந்த் நடத்த அழைப்பு விடுத்துள்ளதை அடுத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்துமாறு மத்தியஅரசு கேட்டுக்கொண்டது.
சென்னை மாநகர போக்குவரத்து: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இயக்கப்பட்டு வரும் 2,500க்கும் மேற்பட்ட பேருந்துகள், இன்று காலை முதல் தொடர்ந்து இயக்கப்பட்டு வருவதாக அதன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தஞ்சாவூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் முழு கடைஅடைப்பு நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 10, 000க்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டன.
12 அம்ச கோரிக்கைகள்: மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க வேண்டும், குடியுரிமை திருத்தம் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பன உட்பட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்களின் சார்பில் சென்னை அண்ணா சாலையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டக்கார்களை சென்னை காவல்துறை கைது செய்தது.
வடசென்னையில் அனைத்துக் கட்சி போராட்டம்: வேளாண் விரோதச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி நடைபெறும் விவசாயிகளின் பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வடசென்னையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில், திமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் கலந்துகொண்டன.
தலைவர் @mkstalin அவர்களின் அறிக்கைக்கிணங்க
விழுப்புரம் மத்திய மாவட்டத்தில்
வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி விழுப்புரம் காந்தி சிலை அருகில்
மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மா.செ. @pugazhenthidmk மற்றும் தோழமைக்கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். pic.twitter.com/35NL2M9uxF— K.Ponmudy M.L.A (@KPonmudiMLA) December 8, 2020
புதுவை முதல்வர் நாராயணசாமி போராட்டம் : விவசாயிகள் டெல்லி போராட்டத்துக்கு ஆதரவாக புதுச்சேரி மாநிலத்தில் முழு அடைப்பு நடைபெற்றது. புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள், டெம்போக்கள் ஓடவில்லை. டீக்கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ள நிலையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தையொட்டி தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வேளாண் மசோதாவுக்கு எதிராக விவசாய சங்கங்கள் நடத்தும் பாரத்பந்திற்கு ஆதரவாகப் புதுச்சேரியின் தெருக்களில் விவசாய சங்கங்கள் அணிவகுத்து நின்றன. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
08-12-2020 | Addressing the Press at #Puducherry . #FarmersProtest pic.twitter.com/8fNOJ3f1LL
— V.Narayanasamy (@VNarayanasami) December 8, 2020
திமுக தலைவர் மு. க ஸ்டாலின் தனது ட்விட்டரில், “உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது! உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்! உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை! விவசாய மக்களுக்கு ஆதரவாக நடைபெறும் பாரத் பந்த் போராட்டம் வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்!” என்று பதிவிட்டார்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டரில், “ரத்தம் உறையும் குளிரிலும், சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டத்தைக் கண்டங்கள் கவனித்துக் கொண்டிருக்கின்றன; அதை நீளவிடக்கூடாது. இன்று அடைக்கப்பட்ட நாட்டின் கதவுகள் திறக்கும்போதே மத்திய அரசும் மனம் திறக்க வேண்டுமென்று மக்கள் விரும்புகிறார்கள்” என்று பதிவிட்டார்.
இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே விவசாயிகளிடையே குழப்பம் ஏற்படுத்த முயற்சிப்பதாக மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ‘பாரத் பந்த்’ தோல்வி – பாஜக: மாநில தலைவர் எல்.முருகன் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தமிழகத்தில் ‘பாரத் பந்த்’ தோல்வியடைந்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மோடி விவசாயிகளின் நண்பன் என்ற இயக்கம் இன்று முதல் துவங்கப்பட உள்ளது. பாஜகவினர் கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை சந்தித்து மத்திய அரசின் வேளாண் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.