How to Check Name on Electoral Roll: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு வாக்களிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை. ஆனால் அதற்கு உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது அவசியம்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் தயாரித்து வெளியிடப்படும் பட்டியல் தான் வாக்காளர் பட்டியல். அதில் 18 வயதுக்கு மேலான, வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களின் பெயர் இடம் பெறும்.
ஏற்கனவே வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவராக இருந்தால், வாக்காளர் பட்டியலில் நிச்சயம் உங்கள் பெயர் இருக்கும். ஆனால் சில சமயங்களில் ஓட்டுப் போட வாக்குச் சாவடிக்குச் சென்றதும் தான், வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இல்லை என்பது பலருக்கு தெரியவரும். இதில் துரதிஷ்டம் என்னவென்றால், அவர்களிடம் வாக்காளர் அடையாள அட்டை இருக்கும். அதனால் வாக்களிக்க செல்லும் முன், வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என்பதை தெரிந்துக் கொள்வது அவசியம்.
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயரை எப்படி கண்டுப்பிடிக்கலாம்?
ஜனவரி 31 அன்று வாக்காளர் பட்டியல் வெளியாகியுள்ளதை அடுத்து, கீழ்காணும் முறையில் வாக்காளர் பட்டியலில் உங்களின் பெயர் இருக்கிறதா என்பதைத் தெரிந்துக் கொள்ளலாம்.
1. தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலை ‘லாக் ஆன்’ செய்துக் கொள்ளுங்கள்.
2. இடது புறம் ஒரு தேடல் இயந்திரம் இருக்கும். அதில் உங்கள் பெயரை டைப் செய்து தேடுங்கள். ஒருமுறை அதனை ‘க்ளிக்’ செய்தவுடன், அது நேரடியாக வாக்காளர் தேடல் பக்கத்திற்கு போகும். அதில் உங்களது பெயர், பிறந்தத் தேதி, மாநிலம், மாவட்டம், தொகுதி, பாலினம் போன்ற முக்கிய விபரங்களை சமர்பிக்க வேண்டும்.
3. இவை அனைத்தையும் பதிவு செய்தவுடன் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பது தெரியவரும். சில நேரங்களில் திரையில் எதுவும் தோன்றாமலும் போகும். அப்படியென்றால், இம்முறை உங்களால் வாக்களிக்க முடியாது. காரணம், வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லை.
சரி, வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயரை எவ்வாறு இடம் பிடிக்கச் செய்வது என்பதை இங்கே பார்ப்போம்.
தேவைகளைப் பொறுத்து இந்திய தேர்தல் ஆணையம் பல வடிவங்களில் வாக்காளர் சேவை ’போர்ட்டலைக்’ கொண்டுள்ளது. இதன் மெயின் பக்கத்தில், வெவ்வேறு வடிவங்களில் இணைப்புகள் (லிங்க்) கொடுக்கப்பட்டிருக்கும்.
புதிய வாக்காளர்கள் படிவம் 6-ஐ கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வயது மற்றும் இருப்பிடத்துக்கான அடையாள சான்றிதழ் இதற்குத் தேவை.
சில சமயம், உயிருடன் இருப்பவர்கள் இறந்தவர்கள் போல் தெரிவார்கள், வயது தவறாகக் குறிப்பிடப்பட்டிருக்கும், பெயரில் எழுத்துப்பிழை இருக்கும். இதனை வாக்காளர் பட்டியலில் சரி செய்ய, படிவம் 8-ஐ பூர்த்தி செய்ய வேண்டும்.
அதே தொகுதிக்கு உள்ளடங்கிய வேறு இடத்திற்கு நீங்கள் குடிப்பெயர்ந்திருந்தால் படிவம் 8ஏ-வை பூர்த்தி செய்யுங்கள். வேறு தொகுதிக்கு இடம் பெயர்ந்ததாலோ அல்லது வேறு காரணங்களால், குறிப்பிட்ட தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இருந்து உங்களது பெயரை நீக்க வேண்டுமெனில், படிவம் 6 மற்றும் 7-ஐ பூர்த்தி செய்திடுங்கள். இதில் படிவம் 6 வேறு தொகுதியில் வாக்குரிமை கோரவும், படிவம் 7 பழைய தொகுதியின் பட்டியலில் இருக்கும் உங்களது பெயரை நீக்கவும் உதவுகிறது.
பிறகென்ன சிரமமின்றி வாக்காளர் பட்டியலில் இடம் பிடித்திடுங்கள்!