/indian-express-tamil/media/media_files/2025/10/20/lakshmi-gubra-pooja-2025-10-20-05-54-58.jpg)
இந்த லட்சுமி குபேர பூஜையை எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளார். Photograph: (Athma Gnana Maiyam/ YouTube)
தீபாவளி பண்டிகை நாள் அன்று இந்துக்கள் லட்சுமி குபேர பூஜை செய்வது வழக்கம். இந்த லட்சுமி குபேர பூஜையை தீபாவளி அன்று எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் திருமுருக வள்ளல் வாரியார் சுவாமியின் மாணவி தேச மங்கையர்க்கரசி விளக்கமாகக் கூறியுள்ளார்.
தீபாவளி என்றாலே காலையில் எழுந்து எண்ணெய் தேய்த்து குளித்து, புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து, பலகாரங்கள் செய்து படைத்து விருந்து சாப்பிடுவது என்பது பலருக்கும் நினைவுக்கு வரும். ஆனால், இந்த தீபாவளி நாளில் செல்வம் பெருக லட்சுமி குபேர பூஜை செய்யப்படுகிறது. இந்த லட்சுமி குபேர பூஜையை எப்போது, எப்படி செய்ய வேண்டும் என்பதை ஆத்ம ஞான மையம் யூடியூப் சேனலில் தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளார்.
தேச மங்கையர்க்கரசி குபேர லட்சுமி பூஜை பற்றி கூறுகையில், “தீபாவளி நாளில் குபேர லட்சுமி பூஜை செய்ய வேண்டும். செல்வத்திற்கு அதிபதியான குபேரன், செல்வங்களை எல்லாம் இழந்து, கஷ்டப்பட்டபோது, இந்த தீபாவளி நாளில் லட்சுமி தேவியை வழிபாடு செய்து, இழந்த தனது செல்வங்களை எல்லாம் திரும்பப் பெற்றார். அதன் அடிப்படையில், இன்று மக்கள் லட்சுமி குபேர பூஜை செய்தால், கடினமான காலங்கள் போய், வீட்டில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
லட்சுமி குபேர பூஜையை எப்போது செய்ய வேண்டும் என்றால், தீபாவளி நாளில் திங்கள்கிழமை (20.10.2025) மாலை 4.15-க்கு மேல் அமாவாசை தொடங்குகிறது. அதனால், மாலை 6 மணிக்கு மேல் லட்சுமி குபேர பூஜை செய்யத் தொடங்கலாம். மாலை 6 மணியிலிருந்து இரவு 9 மணி வரை இந்த லட்சுமி குபேர பூஜை செய்து வழிபாடு செய்யலாம்.
லட்சுமி குபேர பூஜை செய்ய, குபேரன் படம், லட்சுமி தேவி படம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில், சிறியதாக மாக்கோலமிட்டு, மனை வைத்து அதில், வடக்கு திசை பார்த்தபடி, குபேரன் மற்றும் லட்சுமி தேவி படத்தை வையுங்கள்.
குபேரன் படம் இல்லை, மகாலட்சுமி படம் மட்டும்தான் இருக்கிறது என்றால், மகாலட்சுமி படம் வைத்துக்கொள்ளுங்கள். அதாவது நீங்கள் கிழக்கு - மேற்கு நோக்கி அமர்ந்துகொண்டு பூஜை செய்யும்படியாக இருக்க வேண்டும். படம் இல்லாதவர்கள் கலசம் வைத்தும் வழிபாடு செய்யலாம்.
அர்ச்சனை செய்ய 108 நாணயங்கள் எடுத்துக்கொள்ளுங்கள். வெளிநாட்டில் இருந்தால், அவர்கள் வாழும் அந்தந்த நாட்டு நாணயங்களை ஒரே மாதிரியான நாணயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். 108 நாணயங்கள் இல்லை என்றால் 9 நாணயங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.
லட்சுமி குபேர பூஜை செய்யும்போது, அர்ச்சனை செய்ய குங்குமம், துளசி, தாமரைப் பூ தேவை. நைவேத்தியமாக, அவலில் செய்த பாயசம் அல்லது அவலில் செய்த பிரசாதம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.
பூஜையில், கொஞ்சம் காசுகளை ஒரு சின்ன பையில் போட்டு மூட்டை போல கட்டி வையுங்கள். குபேரன் பண மூட்டையுடன் இருப்பார் என்பதற்காக வைக்கப்படுகிறது.
பிறகு, வழக்கம் போல, வாழைப் பழம், வெற்றிலைப் பாக்கு, ஊதுவத்தி பூஜை பொருட்கள் எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து, குபேரன் இயந்திரம் வரைந்து வைத்துக்கொள்ளுங்கள். அடுத்த நாள் துடைத்துவிட வேண்டும்.
அடுத்து, லட்சுமி குபேர பூஜையில், மகாலட்சுமி 108 ஸ்தோத்திரம் சொல்லும்போது, மலர்கள், குங்குமம், காசுகளைப் பயன்படுத்தலாம்.
108 நாணயங்கள் இல்லையென்றால், 9 நாணயங்கள் எடுத்துக்கொண்டு, ஒரு தாமரை இதழில், ஒரு நாணயம், குங்குமம் வைத்து, ஓம் குபேராய நமஹ, ஓம் கணபதியே நமஹ என்று சொல்லிக்கொண்டு அந்த 9 நாணயங்களையும் மகாலட்சுமிக்கு அர்ச்சனை செய்யலாம். நைவேத்தியப் பொருட்களை நைவேத்தியம் செய்ய வேண்டும். இந்த லட்சுமி குபேர பூஜையை குடும்பத்தில் உள்ள அனைவரும் அமர்ந்து செய்ய வேண்டும்.
லட்சுமி குபேர பூஜையை ஆரம்பிக்கும்போது, முதலில் விநாயகரை வணங்கி, குல தெய்வத்தை வணங்கி, இஷ்ட தெய்வத்தை வணங்கி, மகாலட்சுமியை வணங்கி, பூஜையை நிறைவு செய்த பிறகு, வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் வாங்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் இல்லையென்றால், சுவாமியை வணங்கலாம்.
இந்த லட்சுமி குபேர பூஜையில் வைத்த பொருட்களை என்ன செய்ய வேண்டும் என்றால், நைவேத்தியப் பொருட்களை சாப்பிடலாம். அடுத்த நாள் காலையில், அர்ச்சனை செய்த காசுகளை, நாம் புழங்கும் பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளுங்கள். இது விசேஷப் பலன்களைத் தரும். அவ்வலவு வைக்க இடம் இல்லை என்றால், முடிந்த அளவு வையுங்கள், மீதம் இருக்கும் காசுகளை கோவில் உண்டியலில் போட்டுவிடுங்கள்.
இந்த லட்சுமி குபேர பூஜையை ஆண்கள், பெண்கள் என அனைவருமே செய்யலாம். தீபாவளி நாளில், மாலையில் இந்த லட்சுமி குபேர பூஜை செய்து வாழ்க்கையில் எல்லா வளங்களையும் நலங்களையும் பெற்று செழிப்பாக வாழ வாழ்த்துகள்” என்று திருமுருக வள்ளல் வாரியார் சுவாமியின் மாணவி தேச மங்கையர்க்கரசி கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.