தமிழகத்தில் நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
நீர் நிலைகள் மற்றும் கடலில் மூழ்குவதால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க கோரி சென்னையை சேர்ந்த கோட்டீஸ்வரி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் நீரில் மூழ்கி உயிரிழப்பது என்பது தொடர் நிகழ்வாக இருப்பதாகவும், வார இறுதி நாட்கள், விடுமுறை, கோடை விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறை நாட்களில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் ஆழம் தெரியாத நீர் நிலைகள், பயன்பாடு முடிவடைந்த கல்குவாரிகள் போன்றவற்றை வேடிக்கை பார்க்க செல்வதும், குளிக்க செல்லும் போதும் நீரில் மூழ்குவதும் அதிகரித்து வருகின்றது.
இது போன்ற ஆழம் தெரியாத பகுதிகளில் செல்பி எடுக்க சென்று தவறி விழுந்து நீரில் மூழ்குவதும் அதிகரித்து வருகின்றது. தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கையின் படி கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்து 884 பேராக உள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர்கள் 90 விழுக்காட்டினர் 12 வயதிற்குட்பட்டவர்கள் என்பது மிகவும் அதிர்ச்சியானதாக இருப்பதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கடல் சீற்றம் மற்றும் கடலில் மூழ்கி இறப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புகார் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எதுவும் வழங்கப்படவில்லை. எனவே சுற்றுலா தலங்கள், கோவில் குளங்கள், அருவிகள், கடல் பகுதிகளில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் நீச்சலில் நிபுணத்துவ வாய்ந்தவர்கள் கொண்ட குழுவை உருவாக்க வேண்டும், நெடுஞ்சாலைகளில் உள்ள நீர் நிலைகளில் ஆபத்தான பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும், கடல் சீற்றமான பகுதிகளான சென்னை திருவொற்றியூர் முதல் கிழக்கு கடற்கரை மகாபலிபுரம் வரை தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கடற்கரைகளில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது, நீச்சல் வீரர்களை பணி அமர்த்துவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.
விசாரணைக்கு பிறகு இடைக்கால உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் ஏரி, குளம், கடல் உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், அடுத்த விசாரணை 4 வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.