இந்து சமய அறநிலையத் துறை ஊழியர்களின் குடும்பப் பெண்களை இழிவாக பேசியதாக பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எச் ராஜா மீது வழக்குப்பதிவு:
பாஜகவின் தேசிய செயலாளரான எச் ராஜா சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். இவரின் சர்ச்சை கருத்துக்கள் தமிழக அரசியலில் மட்டுமில்லை பொதுமக்களிடையே கடுமையான எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.
இதுவரை அரசியல் தலைவர்கள், கட்சிகளை பற்றி இழிவாக கருத்து கூறிக் கொண்டிருந்த எச் ராஜா சமீபத்தில் நீதிமன்றத்தையே அவதூறாக பேசியதாக சிக்கலில் மாட்டிக் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக அக்டேபார் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க எச் ராஜாவுக்கு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயன் உத்தரவிட்டிருக்கிறார்.
இதன்படி வரும் அக்டோபர் 3 ஆம் தேதி எச் ராஜா நேரில் ஆஜாராக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபக்கம் என்றால் மறு பக்கம் திண்டுக்கல் வேடசந்தூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எச்.ராஜா, இந்து அறநிலையத் துறை ஊழியர்களையும், அவர்களின் குடும்பத்தினரையும் கொச்சையாக பேசியதாக அடுத்த பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பாக போலீஸில் அறநிலையத்துறை அதிகாரி புகார் கொடுத்திருக்கிறார்.
இதேபோல, எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன் அளித்த புகாரின்பேரில், நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட இடங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.
இதேபோல, சிவகங்கையிலும் எச் ராஜா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அறநிலையத்துறை மேலாளர் லெட்சுமி மாலா அளித்த புகாரில் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
இதனிடையே, நீதித்துறை மற்றும் காவல் துறை குறித்து தவறாக பேசியதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அளித்த புகாரின்பேரில், கும்பகோணம் காவல் நிலையத்தில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கும் அறநிலைத்துறை அதிகாரிகள் தனித்தனியாக காவல் நிலையத்தில் எச் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். ஆனால் கட்சி நிர்வாகம் இதுவரை எச் ராஜா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக தகவல் வெளிவரவில்லை.