கோயில் உண்டியலில் பக்தரின் ஐபோன் தவறி விழுந்த விவகாரம் தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை சார்பாக ஆலோசனை கூட்டம் நடத்தப்படவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் கந்தசாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தினேஷ் என்பவர் வருகை தந்திருந்தார். அப்போது, அவர் காணிக்கை செலுத்தும் போது எதிர்பாராத விதமாக அவரது ஐபோன் உண்டியலில் தவறி விழுந்து விட்டது.
இதைத் தொடர்ந்து, கோயில் நிர்வாகத்தினரிடம் தனது செல்போனை திருப்பி தருமாறு தினேஷ் கேட்டுள்ளார். உண்டியல் காணிக்கை எண்ணும் போது தினேஷிடம் தகவல் அளிப்பதாக கோயில் நிர்வாகத்தினர் பதில் அளித்துள்ளனர்.
இதனடிப்படையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு உண்டியல் காணிக்கை எண்ணும் பணியின் போது தினேஷின் செல்போன் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக தகவலறிந்து கோயிலுக்கு வந்த தினேஷ், தனது போனை கேட்டுள்ளார். ஆனால், உண்டியலில் விழுந்தது முருகனுக்கு சொந்தமானது எனக் கூறிய கோயில் நிர்வாகத்தினர், போனை திருப்பி வழங்க மறுத்து விட்டனர். எனினும், போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறியதாக தெரிகிறது.
கோயில் உண்டியலில் விழுந்த ஐபோன் பக்தரிடம் திருப்பி வழங்கப்படுமா என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, "உண்டியலில் விழுந்த அனைத்தும் கோயிலுக்கு சொந்தமானது எனக் கருதப்படுவது வழக்கம். இந்த விவகாரத்தில் செல்போனை திருப்பி வழங்குவது தொடர்பாக சாத்தியக் கூறுகள் இருக்கிறதா என ஆய்வு செய்யப்படும்" என்று அமைச்சர் பதிலளித்தார்.
இந்நிலையில், ஐபோனை திருப்பி வழங்குவது தொடர்பாக உள்ள சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“