அறநிலையத்துறை பெண் அதிகாரி குளிப்பதை வீடியோ எடுத்தது தொடர்பாக இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் பச்சையப்பனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையராக இருப்பவர் பச்சையப்பன். இவர் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள அறநிலையத்துறை அதிகாரிகள் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவருகிறார். கடந்த மாதம் 28ம் தேதி, சதுரகிரி மகாலிங்கம் கோயிலில் நடந்த உண்டியல் திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி, விருதுநகர் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்ட அறநிலையத்துறை அதிகாரி அனிதா குளியலறையில் குளித்துக்கொண்டிருப்பதை, பச்சையப்பன் தன்னுடைய பென் கேமரா மற்றும் மொபைல் போன் மூலம் வீடியோ பிடித்துள்ளார். இதையறிந்த அனிதா, பச்சையப்பன் மீது போலீசில் புகார் செய்தார். இதனையடுத்து, பச்சையப்பன் மீது பெண் மானபங்கம் உள்ளிட்ட குற்றங்களின் அடிப்படையில் இ.பி.கோ. 354 (சி), 509 மற்றும் 66 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்தனர்.
இதனிடையே, இன்று அதிகாலை பச்சையப்பனின் வீட்டிற்கு சென்ற மதுரை தெப்பக்குளம் போலீசார், அவரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையின் முடிவில், பச்சையப்பன் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.