கோவில்களில் சிறப்பு தரிசன நடைமுறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செவ்வாயன்று சூசகமாக தெரிவித்தார்.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆதி கேசவப் பெருமாள் கோயில் (இராமானுஜர் கோயில்) மற்றும் ராமானுஜர் நினைவிடத்தை அமைச்சர்கள் சேகர் பாபு மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
இதையும் படியுங்கள்: மாவட்ட பஞ்சாயத்து தலைவியுடன் பிரச்னை: தென்காசி தி.மு.க மாவட்டச் செயலாளர் பதவி நீக்கம்
அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, ராமானுஜர் நினைவிடத்தை புதுப்பிக்கவும், அர்ச்சகர்களுக்கான பயிற்சி பள்ளி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.
மேலும், கோவில்களில் சிறப்பு தரிசன நடைமுறையை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோயில்களில் சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள சிவன் கோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இந்த நடவடிக்கை பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே, இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, இந்து சமய அறநிலையத்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம், என்றும் அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
சிறப்புக் கட்டணம் செலுத்தி, விரைவு தரிசனம் செய்யக்கூடிய வசதி படைத்த பக்தர்களுக்கு சிறப்பு தரிசனம் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil