காஞ்சிபுரத்தில் ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதி விபத்து - 9 பேர் பலி

இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த 8 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காஞ்சிபுரம் அருகே தாமல் எனும் பகுதியில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற சரக்கு ஆட்டோ மீது தனியார் பேருந்து மோதியதில் 8 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தாமலில் உறவினர் வீட்டு இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக வேலூர் மாவட்டம் சிறுனைமல்லி பகுதியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் சரக்கு ஆட்டோவில் சென்றனர். இறுதிச் சடங்கில் பங்கேற்று விட்டு திரும்பும் போது, சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை சரக்கு ஆட்டோ கடக்க முயன்றது. அப்போது நெடுஞ்சாலையில் வந்த இரு பேருந்துகள் ஆட்டோ மீது மோதியது.

முதல் பேருந்து மோதியதில் ஆட்டோ நிலை குலைந்த நிலையில், இரண்டாவதாக வந்த ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பேருந்து மோதிய போது ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதில் சரக்கு ஆட்டோவில் இருந்த 8 பெண்கள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த மக்கள் தனியார் பேருந்தை அடித்து நொறுக்கினர். விபத்து ஏற்பட்டவுடன் பேருந்து ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.

இதையடுத்து, படுகாயம் அடைந்த 14 பேரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு பொதுமக்கள் அனுப்பி வைத்தனர். அதில் 4 பேரின் நிலை கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விபத்து காரணமாக சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்து குறித்து பாலுச்செட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

×Close
×Close