காஞ்சிபுரம், உத்திரமேரூர் அருகே திருவந்தவார் அரசுப் பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் சிறுபினாயூர் ஊராட்சிக்கு உட்பட்ட திருவந்தவார் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியின் தண்ணீரையே மாணவர்கள் அருந்தி வருகின்றனர். அவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கவும் இந்த நீரே பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாணவர்களுக்கு மதிய உணவு பரிமாறுவதற்கு முன்பாக, குடிநீரில் இருந்து மலம் கலக்கப்பட்டதைப் போன்ற துர்நாற்றம் அடித்துள்ளது. இதனை அறிந்த ஆசிரியர்கள், உடனடியாக மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதை நிறுத்தினர்.
மேலும், பள்ளி ஆசிரியர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து பள்ளிக்கு வந்த காவல்துறையினர் மலம் கலக்கப்பட்டதாக தொடர்பாக விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜூலியஸ் சீசர் மற்றும் உத்திரமேரூர் வட்டாட்சியர் ஞானவேல் உள்ளிட்டோர் விசாரணை நடத்தியதில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
பள்ளி மாணவர்கள் மற்றும் திருவந்தவார் கிராம மக்களிடம் விசாரணை நடத்திய போலீசார், அப்பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றபோது, அவர்களது பெற்றோர் கத்தி கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம், தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“