விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி. பழனி அவர்கள் விடுத்துள்ள பத்திரிக்கைச் செய்தியில் கூறியிருப்பதாவது, விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், கஞ்சனூர் மதுரா கே.ஆர்.பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள குடிநீர் கிணற்றில் மலம் கலப்பு என சில தனியார் தொலைக்காட்சிகளில் இன்று வரப்பெற்ற செய்தி முற்றிலும் தவறான செய்தியாகும்.
மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி), விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர், காணை வட்டார வளர்ச்சி அலுவலர், செயற்பொறியாளர், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் ஆகியோர் அடங்கிய குழு சம்மந்தப்பட்ட இடத்தினை பார்வையிடப்பட்டது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் செயற்பொறியாளர் மேற்படி கிணற்றில் உள்ள நீரை பரிசோதனை செய்ததில் குடிநீர் முற்றிலும் பாதுகாப்பானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மலம் என செய்திகளில் வரப்பெற்ற பொருளானது தேன் அடை ஆகும் எனவும் இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. கே.ஆர்.பாளையம் கிராமத்தில் வசித்து வரும் பொதுமக்கள் முன்னிலையில் எடுத்துக்காட்டப்பட்டது. இருப்பினும் மேற்படி கிணற்றின் மீது இரும்பு கம்பிகளால் வேலி அமைக்க மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திற்கு விழுப்புரம் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகில் குடிநீர் கிணற்றில் கிடந்தது மலம் அல்ல, தேனடை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விரைந்து நடவடிக்கை எடுத்து விளக்கம் அளித்த மாவட்ட ஆட்சியருக்குப் பாராட்டுகள். விக்கிரவாண்டி இடைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எச்சரிக்கையாகக் கையாளவேண்டும் என ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“