புகாரை முறையாக விசாரிக்காமல் வழக்குப்பதிவு: ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க பெண் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு!
கோவை என்ஜினீயர் தொடர்பான புகாரை சரியாக விசாரிக்காமல் வரதட்சணை கொடுமை பிரிவில் வழக்குப்பதிவு செய்து என்ஜினீயரை சிறையில் அடைத்ததற்காக பெண் இன்ஸ்பெக்டர் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சிறுமுகை எஸ்.ஆர்.எஸ். நகரை சேர்ந்தவர் விஜயகுமார், என்ஜினீயர். இவர் முன்பு வெளிநாட்டில் வேலை செய்து வந்தார்.
Advertisment
இவருடைய மனைவி அளித்த புகாரின்பேரில், கோவை துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை விஜயகுமார் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தார்.
இந்த சம்பவம் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்றது. விஜயகுமார் 5 நாள் சிறையில் அடைக்கப்பட்டார். இந்தநிலையில், "என் மனைவி கொடுத்த புகார் சாதாரண குடும்ப தகராறு தொடர்பானது தான். ஆனால் புகாரை முறையாக விசாரிக்காமல் என் மீது வரதட்சணை கொடுமை பிரிவில் தவறாக வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்து மனஉளைச்சலை ஏற்படுத்தியதாகவும், இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் விஜயகுமார் மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்தார்.
இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம், இன்ஸ்பெக்டர் மீனாம்பிகைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது. அந்த தொகையை பாதிக்கப்பட்ட விஜயகுமாருக்கு 4 வாரத்துக்குள் இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கையை மாநில அரசு மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
செய்தி: ரகுமான், கோவை
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”