/indian-express-tamil/media/media_files/2025/09/14/coimbatore-road-safety-2025-09-14-10-34-55.jpg)
கோவையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு: 'நான் உயிர் காவலன்' என்ற புதிய திட்டம் தொடக்கம்!
கோவையில் சாலை விபத்துகளைக் குறைக்கும் நோக்கில், 'நான் உயிர் காவலன்' எனும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை மாவட்ட நிர்வாகம், மாநகர காவல்துறை மற்றும் உயிர் அமைப்பு இணைந்து தொடங்கியுள்ளது. கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில் இந்த பிரச்சாரத்தின் தொடக்க விழா நடைபெற்றது.
இந்த விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கலந்துகொண்டு, மாணவ மாணவியர் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உரையாற்றினார். அவர் பேசுகையில், "கடந்த சில ஆண்டுகளாக கோவையில் சாலை விபத்துக்களைக் குறைக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டும் உயிர் அமைப்புடன் இணைந்து பல்வேறு பேரணிகள், கருத்தரங்குகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தார்.
மேலும், அக்டோபர் முதல் வாரத்தில் கோவை மாநகரில் உள்ள 10 லட்சம் மக்களை ஒன்றிணைத்து, அனைவரும் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆட்சியர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலை சங்கங்கள் மற்றும் சமூக நல அமைப்புகள் எனப் பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
விளம்பர பலகையும் வெளியீடு
'நான் உயிர் காவலன்' என்ற தலைப்பிலான இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்க விழாவில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், உயிர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜசேகரன், மற்றும் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் உயிர் அறக்கட்டளையின் அறங்காவலருமான மலர்விழி ஆகியோர் கலந்துகொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தனர். அத்துடன், இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கான விளம்பர பலகையையும் அவர்கள் வெளியிட்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us