இந்த ஆண்டில் தமிழகத்திற்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் தேசிய மற்றும் மாநில கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை முழு வீச்சில் துவங்கியுள்ளன. திமுக, அதிமுக மற்றும் கமலின் மக்கள் நீதி மையம் போன்ற கட்சிகள் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்குளை சேகரித்து வருகின்றன. இந்தாண்டு வாக்கு செலுத்த உள்ளோரின் எண்ணிக்கை மட்டுமே சுமார் 6 கோடிக்கு மேல் உள்ளது.
இந்நிலையில் தமிழக தேர்தல் ஆணையம், இளம் வாக்காளர்கள் தங்கள் கடமைகளை தேர்தல் நாளன்று தவறாமல் செலுத்த வேண்டும் என்பதற்காக இணைய பக்கங்களில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகின்றது. அதோடு இளம் வாக்காளர்களை கவரும் வகையில் பேஸ் புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக தமிழக தேர்தல் ஆணையம் தொழில்நுட்ப குழு ஒன்றையும் பணியமர்த்தி உள்ளது. விழிப்புணர்விற்காக ஆரம்பிக்கப்பட்ட பேஸ் புக் பக்கத்தை 1.2 லட்சம் நபர்களும், ட்விட்டர் பக்கத்தை 53,000 நபர்களும் தொடர்கிறார்கள் என கூறப்படுகின்றது.
இளம் வாக்களர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மால்கள் மற்றும் ஷாப்பிங் வளாகங்களில் க்யூஆர் (QR) குறியீடுகள் வைக்கப்பட்டுள்ளன. அதை மொபைல் போனில் ஸ்கேன் செய்தால் தேர்தல் ஆணையத்தின் சமூக ஊடக பக்கங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதோடு இளம் வாக்காளர்கள் எப்படி தங்கள் வாக்குகளை மையங்களில் சென்று செலுத்த வேண்டும் என்ற விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. மற்றும் சமூக வலைத்தளங்களில் #WeAreForVR என்ற ஹாஸ்டாக்கும் தொடங்கப்பட்டுள்ளது
இந்த தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை குறும் படங்களைக் கொண்டும், திரைப்பட நடிகர்களைக் கொண்டும் ஊடகங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். அதோடு திரைப்படத்தின் பெயர்களைக் கொண்ட வசனத்தையும் தயார் செய்துள்ளனர். 'விண்ணைத்தாண்டி வருவாய' என்பது 'வாக்குச்சாவடிக்கு வருவாயா' என்றும், 'எங்க வீட்டு பிள்ளை' என்பது 'நம்ம வீட்டு வாக்காளர்' என்றும், 'நானும் ரவுடி தான்' என்பது 'நானும் வாக்காளர் தான்' என்றும் தயார் செய்யப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil