ஆதம்பாக்கத்தில் காதலித்த பெண்ணை எரித்துக் கொன்ற காதலன் பரபரப்பு வாக்குமூலம்!

ஆனால், ஸ்டேட்டஸ் பார்த்து என்னை இந்துஜா குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்தனர். சில மாதங்களாக என்னிடம் பேசுவதையும் இந்துஜா தவிர்த்துவிட்டார்.

சென்னை ஆதம்பாக்கத்தில் காதலிக்க மறுத்த இளம்பெண்ணைக் கொன்ற காதலனை போலீஸார் கைது செய்தனர். காதலனிடம்  நடத்திய விசாரணையில்  ‘இருவரும் காதலித்தோம். திடீரென அவள் என்னை ஒதுக்கியதால் கொன்றேன்’ என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ஆதம்பாக்கம், சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் சண்முகம். வெளிநாட்டில் வேலை செய்கிறார். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு இந்துஜா, நிவேதா என்ற மகள்களும் மனோஜ் என்ற மகனும் உள்ளனர். இந்துஜாவும், அதே பகுதியை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்ததாகவும், இதனால் இந்துஜாவை ஆகாஷ் காதலித்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், சமீபகாலமாக ஆகாஷுடன் பழகுவதை இந்துஜா நிறுத்திக் கொள்ள, ஆத்திரமடைந்த ஆகாஷ், நேற்றுமுன்தினம் இரவு இந்துஜா வீட்டிற்கே சென்று அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றார். அதுமட்டுமில்லாமல் இந்துஜாவின் தாயார் ரேணுகா, சகோதரி நிவேதா மீதும் தீ வைத்து கொளுத்தினார். இதனால், படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்ட இந்துஜா

இந்த நிலையில், ஆகாஷை கைது செய்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் ‘இருவரும் காதலித்தோம். திடீரென அவள் என்னை ஒதுக்கியதால் கொன்றேன்’ என்று தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்துஜாவின் வீடு

ஆகாஷிடம் போலீஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘எனக்குப் பள்ளி பருவத்திலிருந்தே இந்துஜாவைத் தெரியும். அவர், படித்து ஐ.டி. கம்பெனிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். ஆனால், நான் வேலையில்லாமல் ஊரைச் சுற்றி வந்தேன். சின்ன வயதிலிருந்தே இந்துஜாவை விரும்பினேன். அவரும் என்னை விரும்பினார். ஆனால், ஸ்டேட்டஸ் பார்த்து என்னை இந்துஜா குடும்பத்தினர் ஒதுக்க ஆரம்பித்தனர். சில மாதங்களாக என்னிடம் பேசுவதையும் இந்துஜா தவிர்த்துவிட்டார். அவளை என்னால் மறக்க முடியாமல் தவிக்கிறேன். நேற்றுகூட அவரிடம் என் காதலை ஏற்றுக்கொண்டு என்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கெஞ்சினேன். ஆனால், இந்துஜா மட்டுமல்ல அவரது குடும்பத்தினர் என்னைக் கேவலமாகப் பேசினர். எனக்குக் கிடைக்காத இந்துஜா இனி யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கருதி அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீயை வைத்தேன்’ என்று கூறியுள்ளார்.

ஆகாஷின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதற்கிடையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிவேதாவிடம் என்ன நடந்தது என்று போலீஸார் விசாரித்துள்ளனர். நிவேதாவுக்குக் குறைந்தபட்ச சதவிகிதம் தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதால் அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று டாக்டர்கள் கூறுகின்றனர். ஆனால், ரேணுகாவுக்கு 50 சதவிகிதத்துக்கு மேல் தீ காயங்கள் இருப்பதால் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்துஜாவின் உடல் இன்று பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

×Close
×Close