‘ஐ பேக்’ அதகளம்: தி.மு.க-வுக்கு பிரசாரம் செய்ய பாமக வி.ஐ.பி-க்கு அழைப்பு?

இந்த விவகாரம், திமுக.வினரை அதிர வைத்திருக்கிறது. ‘இது போன்ற கடிதம் இப்படி சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் சென்றால் நிலைமை என்னாகும்?’

By: August 29, 2020, 8:45:31 PM

திமுக.வுடன் கைகோர்த்திருக்கும் ஐ பேக் நிறுவனம் பெயரில் பாமக நிர்வாகிக்கு வந்திருக்கும் ஒரு அழைப்பு சர்ச்சைகளை கிளப்பியிருக்கிறது. இதை மேற்படி பாமக நிர்வாகி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு அம்பலப்படுத்தியிருக்கிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கியப் பிரமுகர்களில் ஒருவர் அருள் ரத்தினம். டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கு மிகவும் நெருக்கமானவர் இவர். சவுமியா அன்புமணி தலைமையில் இயங்கும் பசுமைத் தாயகம் அமைப்பின் பொதுச்செயலாளராக இவர் பொறுப்பு வகிக்கிறார்.

பாமக சார்பிலும், பசுமைத் தாயகம் சார்பிலும் ஈழப் பிரச்னையை ஐ.நா சபையில் எடுத்துச் செல்கிறவர் இவரே. பாமக சார்பில் தேர்தலில் போட்டியிட்டவர் இவர். சமூக வலைதளங்களிலும் பாமக.வுக்காக தீவிரமாக இயங்கி வருகிறார்.

இப்படி அரசியல் வட்டாரத்திலும், இதர பொதுத்தளங்களிலும் பாமக.வுக்காக தீவிரமாக இயங்கி வருகிற அருள் ரத்தினத்தையே திமுக.வின் தேர்தல் பணிக்கு அழைத்திருப்பதுதான் ஷாக்! இது தொடர்பாக அருள் ரத்தினம் தனது முகநூல் பக்கத்தில் எழுதியிருப்பது வருமாறு:

‘திமுகவின் PK அழைப்பு: எனக்கு 9 மாதங்கள் வேலை தருகிறாராம். ஒரு சட்டமன்றத் தொகுதியில் திமுகவுக்கு வேலை செய்ய ஒப்புக்கொண்டால், பிரசாந்த் கிஷோரின் ஐ-பேக் (I-PAC) நிறுவனத்தில் 9 மாதங்களுக்கு வேலை தருவதாக எனக்கும் அழைப்பு வந்துள்ளது.

குறிப்பு: பாமக தனித்து போட்டியிட்ட 2016 தேர்தலில், சிதம்பரம் தொகுதியில் 24,266 வாக்குகள் எனக்கு விழுந்தன. அங்கு வெறும் 1506 வாக்கு வித்தியாசத்தில் திமுக தோல்வியடைந்தது! (இந்த I-PAC அழைப்பு தானியிங்கி முறையில் அனுப்பப்படுவதுதான் என்றாலும், திமுகவை எதிர்க்கும் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கும் இதை அனுப்புவது நியாயம் தானா?’ என கேள்வி எழுப்பியிருக்கிறார் அருள் ரத்தினம். ஐ பேக் சார்பில் தனக்கு வந்ததாக கடித நகலையும் வெளியிட்டிருக்கிறார் அருள் ரத்தினம்.

பாமக ஆதரவாளர்கள் பலரும் திமுக.வையும், ஐ பேக்-கையும் கேலி செய்து மேற்படி பதிவில் கமெண்ட்களை வெளியிட்டு வருகிறார்கள். வினோத் சுந்தரம் தனது கமெண்டில், ‘திருட தெரியாதவன் தலையாரி வீட்டுலே ஒளிந்த கதைதான். உங்களுக்கு மெயில் அனுப்பி சிக்கியது’ என குறிப்பிட்டிருக்கிறார்.

லெனின் திரு வல்லம்படுகை என்பவர், ‘ஐபேக் நிறுவனத்துக்கும் திமுகவின் பொறுப்பாளர்களுக்கும் பெரிய இடைவெளி உள்ளது. திமுகவில் பல ஆண்டுகளாக இருக்கும் பொறுப்பாளர்களை கண்காணிப்பதற்கு கட்சி சாராதவர்களை நியமிக்கும் ஐபேக் நிறுவனத்தின் முடிவால் திமுகவின் பொறுப்பாளர்கள் வெறுப்படைந்து உள்ளனர் என்பது உண்மை’ என குறிப்பிட்டிருக்கிறார்.

Bakkiaraj Raman என்பவர், ‘அண்ணா எங்களை ஒரு 200 பேரை சேர்த்து விடுங்களேன் ! தேர்தலோட மொத்தமா காலி பண்ணிட்டு வந்துடுரோம்’ என கூறியிருக்கிறார். Gurumurthi Tharmalingam என்பவர், ‘ஒரு மாத சம்பளம் ஒரு 10 கோடி கேளுங்கள்’என கிண்டலாக குறிப்பிட்டிருக்கிறார். இப்படி நிறையப் பதிவுகள்!

ஐ பேக் தமிழகத்தில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் தனது பிரதிநிதிகளை நியமித்து தேர்தல் பணிகளை கண்காணிக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. செப்டம்பர் மத்தியில் தொடங்கும் இந்தப் பணி, தேர்தல் முடியும் வரை இருக்கும் என அந்தக் கடித நகலில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

எனினும் இந்த விவகாரம், திமுக.வினரை அதிர வைத்திருக்கிறது. ‘இது போன்ற கடிதம் இப்படி சம்பந்தம் இல்லாதவர்களுக்கு எல்லாம் சென்றால் நிலைமை என்னாகும்?’ என திகிலடைந்து கேட்கிறார்கள் அவர்கள். ஐ பேக்-க்கிற்கு நெருக்கமானவர்கள் தரப்பில், ‘ஐ பேக் யாரையும் அப்படி விசாரிக்காமல் பணியில் அமர்த்திவிடுவதில்லை. ஒரு கடிதம் போயிருந்தால், அதுவே அப்பாயின்மென்ட் ஆர்டர் அல்ல’ என விளக்கம் தருகிறார்கள்.

ஆனாலும் மிகக் கவனமாக இருக்க வேண்டிய களம் அல்லவா இது?

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:I pac letter to pmk pasumai thayagam arul rathinam exposed in social

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X