நெல்லையில், கடந்த மே 2ம் தேதி +2 மாணவர் தினேஷ் ரயில் மேம்பாலத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தந்தையின் குடிப் பழக்கத்தால் குடும்பமும் கல்வியும் சிதைந்து போனதால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. மேலும் தற்கொலை செய்வதற்கு முன்னர் தினேஷ் இறுதியாகத் தனது தந்தைக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “குடிகாதீங்க அப்பா. அப்போதான் நான் சாந்தியடைவேன். நான் செத்து போனதுக்கு அப்புறமாவது நீ குடிகாம இரு. நீ குடிக்கிறதால எனக்கு கொள்ளி வைக்காதே, மொட்ட போடாத. ஓபன் -ஆ சொன்னா நீ எனக்குக் காரியம் பண்ணாத.” என்று எழுதியிருந்தார். மாணவனின் இந்த உருக்கமான கடிதத்தை படித்ததில் அனைவரின் மனமும் கலங்கி போனது.
மருத்துவராகும் கனவில் நீட் தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்த மாணவன், தந்தையின் குடிபோதை பழக்கத்தால் ஏற்படும் பிரச்சனைகளை தாங்கிக்கொள்ள முடியாமல் பரிதாபமாக பலியானார்.
இந்தச் சம்பவத்தை தொடர்ந்து, தினேஷ் இறுதிச் சடங்கில் தந்தை மாடசாமி கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அப்போது, “எனது குடி பழக்கத்தால் என் மகன் இறந்துவிட்டானே. நான் திருந்திவிட்டேன், என்னைப் பார்த்தாவது மற்றவர்கள் திருந்த வேண்டும். டாக்டர் ஆவான் என்று நினைத்திருந்தேன். ஆனால் இப்படி இறந்துவிட்டான். இனிமேல் குடிக்கமாட்டேன். அப்போதுதான் அவனுடைய ஆத்மா சாந்தியடையும்.” என்று கூறியபடி அழுதார்.
குடி குடியை கெடுக்கும் என்ற வார்த்தைகள் உண்மையாகியிருக்கும் இந்தச் சம்பவத்தால் நெல்லை மாவட்டமே சோகத்தில் உள்ளது.