தமிழகத்தில் நடந்துள்ள மிகப்பெரிய பண மோசடி விவகாரங்கள் குறித்தும், தமிழக அரசியல்வாதிகளின் பினாமிகள் குறித்தும் பல தகவல்கள் வெளிக் கொணரப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையிடம் இருந்து தகவல் கசிந்துள்ளது. குறிப்பாக, சென்னையைச் சேர்ந்த ஆதி என்டர்பிரைசர்ஸ் எனும் தனியார் நிறுவனத்தின் நிறுவனர்கள் சுனில் கேட்பாலியா மற்றும் மனீஷ் பார்மர் ஆகியோர் பினாமிகளாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வெளியாகியுள்ள தகவலில், கடந்த வெள்ளிக்கிழமை சென்னையைச் சேர்ந்த எடிசன் எனர்ஜி இந்தியா பிரைவேட் லிமிட்டட் என்ற நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்நிறுவனத்தில் சுனில் கேட்பாலியா ரூ.30 கோடி முதலீடு செய்து, நிறுவனர்களில் ஒருவராக செயல்படுகிறார். மற்றொரு இயக்குனர் மனீஷ் பார்மர், அதிமுகவின் முக்கிய தலைவர் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ளார். பல மத்திய ஏஜென்சிகளால் அவர் கண்காணிப்பட்டு வருவதாகவும் அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எம்ஆர்சி நகரில் உள்ள ஃபிர்ஹேவன் எஸ்டேட்டின் 4.3 ஏக்கர் நிலத்தை, சீரியல் முதலீட்டாளர் சி சிவசங்கரனிடம் இருந்து ரூ.380 கோடிக்கு இவர்கள் இருவரும் கையகப்படுத்தியுள்ளனர்.
2014-ல் வணிகத்தில் இணைந்த ஆதி, வர்த்தக ரீதியில் எந்தவித பரிமாற்றத்திலும் ஈடுபடவில்லை. ஆனால், மொரீஷியஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பகடோலஸ் இன்வெஸ்ட்மென்ட் முதலீடு நிறுவனத்தில் இருந்து ரூ.250 கோடி அவர் பெற்றுள்ளார். மொரிஷீயஸ் நிறுவனத்தின் இந்த முதலீடு நேர்மையானதாக நடைபெறவில்லை என்பதற்கு எங்களிடம் ஆதாரம் உள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஐடி பிரிவின் புலனாய்வுத் துறை அதிகாரிகள் சிவசங்கரனிடம் விசாரித்த போது, 'நான் நிலத்தை விற்கும்படி கட்டாயப்படுத்தப்பட்டேன். நீண்ட காலமாக செலுத்த வேண்டிய வட்டியை அடைப்பதற்காக எனக்கு அழுத்தம் கொடுத்து அந்த நிலத்தை விற்க வைத்தார்கள்' என தெரிவித்துள்ளார்.
பெரும் அரசியல் தலைவர்களும் இந்த பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளதாகவும், நிலம் விற்கப்பட்டதில் அவர்களுக்கும் பங்கு கொடுக்கப்பட்டுள்ளது என ஐடி அதிகாரிகள் கூறுகின்றனர். இதனால், ஆதியின் வங்கிக் கணக்கை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். அதில் 70 கோடி பணம் இருந்துள்ளது.
ஃபிர்ஹேவன் எஸ்டேட்டை கையகப்படுத்தியதோடு மட்டும் கேட்பாலியா மற்றும் பார்மர் நின்று விடவில்லை. அக்டோபர் 2015ம் ஆண்டு, இருவரும் கேஎல்பி புராஜெக்ட்ஸ் என்ற நிறுவனத்தின் பெயரில், வீடு கட்டும் புராஜெக்டை தொடங்கியுள்ளனர். இதற்காக, சென்னையைச் சேர்ந்த பிரபலமான நிறுவனத்திடம் இருந்து 14 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி இருக்கின்றனர்.
ராஜஸ்தானில் சிறு சிறு அளவில் பைனான்ஸ் செய்து வந்த சுனில் கேட்பாலியா, அரசியல்வாதிகளோடு ஏற்பட்ட நெருக்கத்தால், குறுகிய காலத்தில் புகழ், பணம் என சம்பாதித்துள்ளார். பல முக்கிய தலைவர்கள், 2011-16 வரை பதவியில் இருந்து பல அமைச்சர்கள் இவ்விருவரிடமும் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் எங்களது கண்காணிப்பில் உள்ளனர் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.