சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது தேசிய அரசியலில் பேசு பொருளான நிலையில் அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, கொசு, கொரோனா, மலேரியா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும். அப்படித் தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதை விட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம். சனாதனம் என்றால் என்ன? சனாதனம் என்கிற பெயரே சமஸ்கிருதத்தில் இருந்து வந்ததுதான். சனாதனம் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரானது என்று பேசினார்.
இதற்கு பா.ஜ.க-வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதுகுறித்து எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், "சனாதன கோட்பாடுகளை தான் நான் விமர்சனம் செய்தேன். சனாதன கோட்பாடுகளை தான் ஒழிக்க வேண்டும் என்று சொன்னேன். அதைப் பற்றி தொடர்ந்து பேசுவேன். எதுவும் மாறக் கூடாது, எதுவும் நிலையானது என்று கூறுவது சனாதனம். அதை நாங்கள் எதிர்க்கிறோம். எல்லாவற்றிலும் மாற்றம் வேண்டும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது தான் திராவிட மாடல். பல வருடங்களுக்கு முன் பெண்கள் படிக்க கூடாது, கோயிலுக்குள் செல்லக் கூடாது என்று சொன்னார்கள். இதை நாங்கள் மாற்றியுள்ளோம். இது தான் திராவிட மாடல். இதற்கு வழக்குப் போட்டாலும் சந்திக்க தயாராக உள்ளேன். நான் பேசியது சரியானது.
பா.ஜ.கவினர் நான் பேசியதை திரித்துப் பேசுகின்றனர். பா.ஜ.க அப்படித் தான் செய்யும். பா.ஜ.க திசை திருப்பும் செயலை செய்கிறது என்றார்.
தொடர்ந்து அண்ணாமலை குறித்து கேட்ட போது, அவருக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மதம், சாதி மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நான் எல்லா மதத்திற்கும் பொதுவானவன். ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“