சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு தற்போது உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா நாடுகளில் கொரோனா தனது 3-வது மற்றும் 4-வது அலையை தொடர்ந்து வருகிறது. தற்போது உலகின் பல நாடுகளில் கொரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில் சில நாடுகளில் பொதுமக்களின் அச்சத்தை போக்க நாட்டின் முக்கியஸ்தர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.
இந்நிலையில், இந்தியாவில், கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில் கண்டறியக்கட்ட கோவிஷீல்ட் தடுப்பு மருந்து பொதுமக்களுக்கு செலுத்தப்படும் வகையில் இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் திருச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் வகையில், கோவிஷீல்ட் தடுப்பூசி ஏற்றப்பட்ட வாகனங்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய கொரோனா தடுப்பு மருந்துகள் மீது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், மக்களுக்கும் எந்தவிதமான பாதகமான விளைவுகளையும் ஏற்படவில்லை. தடுப்பூசிகளில் பரிசோதிக்கப்பட்ட எவருக்கும் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. கொரோனாவுக்கு இந்தியாவிலேயே தடுப்பூசி தயாரிக்கப்பட்டது பெருமை வாய்ந்த தருணம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா வைரஸ் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த அவர், கொரோனா தடுப்பூசியின் முடிவை நிரூபிக்க அதை தானே எடுத்துக்கொள்வதாகவும் கூறினார். மேலும் இந்த தடுப்பூசி எடுத்துக்கொண்ட உடன், உடனாடியாக உடலில் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்ற எண்ணத்தில் யாரும் இருக்கக்கூடாது என்பதையும் தெளிவு படுத்திய சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர், முதல் டோஸ் கொடுத்து 28 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது டோஸ் கொடுக்கப்படும். இரண்டாவது டோஸ் கொடுத்து 14 நாட்களுக்குப் பிறகு நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். எனவே, மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்," என்று தெரிவித்துள்ளார்.
"உடல்நலப் பிரச்சினைகள், இணை நோய்கள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் இந்த தடுப்பூசி போடக்கூடாது என்றும் எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று கோயம்புத்தூரில் உள்ள ஒரு சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மதுரையில் உள்ள 10 தடுப்பூசி மையங்கள் மூலம் தடுப்பூசியைத் விநியோகிப்பதை தொடங்க திட்டமிட்டுள்ளதாக சுகாதார மையத்தின் துணை இயக்குநர் டாக்டர் கே வி அர்ஜுன்குமார் தெரிவித்தார், ஆனால் அவற்றைக் பாதியாக குறைக்க திட்டமிட்டுள்ளதாகவும், இது குறித்து எண்ணிக்கை இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.