புரட்சிகரமான நடவடிக்கைகள் எடுத்த தனக்கு கிரிமினல் முத்திரை குத்தப்பட்டதாக, முன்னாள் மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், “நான் தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது எடுத்த பல நடவடிக்கைகளை புரட்சி என்றுதான் சொல்ல வேண்டும். சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களும் இப்போது இணையத்தில் முகநூல், ட்விட்டர், வாட்ஸ் ஆப் பயன்படுத்த முடிகிறதென்றால் அது, ராசா மற்றும் திமுகவினால் தான். 2ஜி அலைக்கற்றை ஏற்கனவே இருந்தாலும், அதனை சாதாரண நபர் பயன்படுத்த முடியாது. ஆனால், நான் கிரிமினலாக முத்திரை குத்தப்பட்டேன்”, என தெரிவித்தார். 3ஜி, 4ஜி அலைக்கற்றையை அறிமுகப்படுத்தவும் தாங்கள்தான் காரணம் என ஆ.ராசா குறிப்பிட்டார்.
மேலும், திமுகவின் தேர்தல் தோல்விகளுக்கு 2ஜி வழக்கும் ஒரு காரணம் எனவும், இப்போது தான் குற்றமற்றவன் என நிரூபித்ததன் மூலம் அதனை கட்சிக்கான பலமான மாற்றுவோம் எனவும் அவர் கூறினார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக தோல்வி குறித்து கட்சி உயர்மட்ட குழு ஆலோசனை செய்துவருவதாகவும், தான் தற்போதைய நிலையில் அதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை எனவும், ஆ.ராசா தெரிவித்தார்.
இடைத்தேர்தல் தோல்வி குறித்து மு.க.அழகிரியின் கருத்து குறித்தும் ஆ.ராசா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.