”சங்கர் கொலை வழக்கில் விடுதலையான மூன்று பேருக்கும் தண்டனை கிடைக்க பெறும்வரை என் சட்ட போராட்டம் தொடரும்”, என கௌசல்யா தெரிவித்துள்ளார்.
உடுமலை சங்கர் சாதி ஆணவ படுகொலையில், கௌசல்யாவின் தந்தை சின்னசாமி உட்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் இன்று (செவ்வாய் கிழமை) தீர்ப்பு வழங்கினார். கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, உறவினர் பாண்டிதுரை, வாகனம் ஏற்பாடு செய்த பிரசன்ன குமார் ஆகியோர் விடுதலையாஜினர்.
குற்றவாளிகளான கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, கூலிப்படையை சேர்ந்த மணிகண்டன், ஜெகதீசன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகியோருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மற்ற 2 குற்றவாளிகளான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
இந்நிலையில், தீர்ப்பு வழங்கப்பட்டபின் தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த சங்கரின் மனைவி கௌசல்யா, “என் சங்கர் சிந்திய ரத்தத்திற்கு உரிய நீதிக்காக, ஒன்றே முக்கால் ஆண்டுகள் காத்திருந்தேன். இத்தீர்ப்பை வரவேற்கிறேன். இந்த தீர்ப்பின் மூலம் நீதித்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வழக்கில் தீர்ப்பு வரும் வரை குற்றம்சாட்டப்பட்டவர்களை நீதிமன்ற காவலிலேயே வைத்திருந்தது அரிதிலும் அரிது. இதன்மூலம், இந்த வழக்கை நீதிமன்றம் தனித்துவமாக அணுகியுள்ளது.”, என கூறினார்.
மேலும், இந்த தீர்ப்பு இதுபோன்று வருங்காலத்தில் நிகழும் சாதிய ஆணவ கொலை வழக்குகளுக்கு முன்னுதாரணமாக அமையும் என கௌசல்யா தெரிவித்தார்.
“தூக்கு தண்டனை குறித்த எனது கருத்து வேறாக இருந்தாலும், சாதிய வெறியர்களுக்கு ஆணவ கொலை செய்ய மனத்தடையையும், அச்சத்தையும் இத்தீர்ப்பு ஏற்படுத்தும். இந்தியாவிலேயே சாதிய ஆணவ படுகொலைகளுக்கு இப்படிப்பட்ட தீர்ப்பு வழங்கப்படுவது இதுவே முதன்முறை என்பதால், எங்கள் காத்திருப்பு வீண்போகவில்லை. இரட்டை தூக்கு தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டிருப்பது, குற்றவாளிகள் தப்பிக்க இடமளிக்ககூடாது என்பதையே காட்டுகிறது. இந்த தீர்ப்பு எல்லா வகையிலும் முக்கியமானது.”, என கூறினார்.
வழக்கில் விடுதலையான மூன்று பேருக்கும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அவர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறும் வரை தன் சட்டப்போராட்டம் தொடரும் எனவும், தண்டனை கிடைக்கப்பெற்றவர்கள் மேல்முறையீடு செய்தாலும் அதனை சட்டத்தின் வழியில் சென்று போராடுவேன் எனவும் கௌசல்யா கூறினார்.
மேலும், தீர்ப்பு வழங்கியபின் நீதிமன்ற வளாகத்திலேயே அசாதாரண சூழல் நிலவியதால், தனக்கும், சங்கர் குடும்பத்திற்கும் காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தீர்ப்பு வழங்கப்படுவதற்கு உறுதுணையாக இருந்த அரசியல் கட்சிகள், போராட்ட இயக்கங்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகங்களுக்கு கௌசல்யா நன்றி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.