தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வுத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கரூர் மற்றும் சென்னை வீட்டில் அமலாக்கத் துறையினர் இன்று காலை முதல் (ஜுன் 13) திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதர் அசோக் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் படை பாதுகாப்புடன் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறை சோதனை குறித்த தகவல் கிடைத்ததும் நடைபயிற்சி சென்று இருந்த செந்தில் பாலாஜி அவசரமாக வீடு திரும்பினர்.
முழு ஒத்துழைப்பு
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, "அமலாக்கத் துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்த விவரங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்.
ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். அமலாக்கத் துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும்" என்று கூறினார்.
2011 முதல் 2016 வரையிலான அ.தி.மு.க ஆட்சியில் செந்தில் பாலாஜி போக்வரத்து துறை அமைச்சராக இருந்தார். அப்போது போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக செந்தில் பாலாஜிக்கு சொந்தாமான இடங்கள் அவர்களது உறவினர், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று செந்தில் பாலாஜியின் வீடுகளில் அமலாக்கத் துறை திடீர் சோதனை நடத்தப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil