ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளமாட்டேன் : சென்னையில் கமல்ஹாசன் பேட்டி

‘‘இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அஞ்சலி செலுத்துவதற்காகவே நான் மும்பை செல்கிறேன்’’ என்று கமல் சொன்னார்.

மரணம் அடைந்த நடிகை ஸ்ரீதேவியின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளமாட்டேன் என்று சென்னையில் இருந்து மும்பை செல்லும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

நடிகை ஸ்ரீதேவி நேற்று அதிகாலை துபாயில் இறந்தார். அவருடைய மரணம் இந்திய திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இன்று இரவு ஸ்ரீதேவியின் உடல் மும்பை கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

நடிகை ஸ்ரீதேவியுடன் 21 படங்களில் நடித்தவர் கமல்ஹாசன். நடிகை ஸ்ரீதேவியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இன்று மாலை 3.50 மணிக்கு விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றார், கமல்ஹாசன்.

விமான நிலையத்தில் நிருபர்கள் அவரிடம் பேசிய போது, ‘‘இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன். அஞ்சலி செலுத்துவதற்காகவே நான் மும்பை செல்கிறேன்’’ என்று சொன்னார்.

ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்ட போது, ‘‘இது பற்றி நீங்கள்தான் கேள்வி எழுப்பி உண்மையை கண்டறிந்து சொல்ல வேண்டும்’’ என்று பதிலளித்தார்.

கடந்த 21ம் தேதி கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். அப்துல் கலாம் இல்லத்தில் இருந்து அவர் அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். அப்போது கலாம் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ளாதது ஏன்? என்ற கேள்விக்கு இறுதி ஊர்வலத்தில் பங்கேற்பதில்லை என்று சொல்லியிருந்தார். ஆனால் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட புகைப்படத்தை எடுத்துப் போட்டு கிண்டல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close