"அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் சட்டரீதியாக போராடி மீட்பேன்”, என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று (செவ்வாய் கிழமை) செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், “இரட்டை இலை சின்னம் தொடர்பாக இன்னும் இரண்டு நாட்களில் உச்சநீதிமன்றம் செல்வோம். அ.இ.அ.தி.மு.க. எங்களின் இயக்கம். அதை சட்டப்படி போராடி மீட்போம். எங்கள் அணி சார்பில் தனிக்கொடியை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை; இரட்டை இலை வழக்கின் தீர்ப்பில் கொடி, கட்சி அலுவலகம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை”, என கூறினார்.
அப்போது, ஜெயா தொலைக்காட்சியை கைப்பற்றுவோம் என எம்.எல்.ஏ.செம்மலை கூறியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “முடிந்தால் கைப்பற்றட்டும்”, என தெரிவித்தார்.
தன்னுடைய அணியில் இருந்த எம்.பி.க்கள் நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்தியானந்த், கோகுல கிருஷ்ணன் ஆகியோர் முதலமைச்சர் அணிக்கு சென்றது குறித்து கூறிய டிடிவி தினகரன், அவர்களை தகுதி நீக்கம் செய்துவிடுவார்களோ என்ற பயத்தில் செல்வதாக தன்னிடம் கூறிவிட்டுத்தான் சென்றார்கள் என கூறினார்.
மேலும், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என உத்தரவிடகோரி அம்ருதா என்பவர் தாக்கல் செய்த மனு, உச்சநீதிமன்றத்தில் வழக்கில் இருப்பதால் தான் அதுகுறித்து ஏதும் கருத்து தெரிவிக்க முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.
மக்கள் விரோத ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி அம்மா ஆட்சியை நிலைநாட்ட தனக்கு வாக்களியுங்கள் எனக்கூறி ஆர்.கே.நகர் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்வேன் எனவும், அத்தொகுதியில் தான் வெற்றிபெறுவேன் எனவும் தினகரன் தெரிவித்தார்.
அரசியலைவிட்டு வெளியேறுவேன் எனக்கூறும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி போன்றோருக்கு பதில் சொல்லி நேரத்தை வீணாக்க தயாரில்லை எனவும் அவர் கூறினார்.