Advertisment

சென்னையில் விமானப் படை சாகசம்: நெருக்கடியில் சிக்கிய மக்கள்; இதுவரை 5 பேர் பலி; இ.பி.எஸ் கண்டனம்

மெரினாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க. ஸ்டாலின் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

author-image
WebDesk
New Update
crowd iaf adventures

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மெரினாவில் விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க. ஸ்டாலின் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் மெரினாவில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சியை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வந்து கண்டு களித்தனர்.

அதே நேரத்தில், விமானப்படையின் விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த லட்சக் கணக்கான பொதுமக்களுக்கு போதிய முன்னேற்பாடுகள் செய்யாத காரணத்தால் விமான சாகச நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்கள் நெருக்கடியில் சிக்கி பெரும் அவதியடைந்தனர்.

விமான சாகச நிகழ்ச்சியைக் காணவந்த பொதுமக்களுக்கு போதுமான குடிநீர், உணவு, கழிப்பிடம், போக்குவரத்து உள்பட அடிப்படை வசதிகள் போதிய அளவில் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். கடுமையான வெயில் இருந்ததால், விமான சாகச நிகழ்ச்சியைக் காண வந்த மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஜான் என்பவர் விமான சாகச நிகழ்ச்சியைக் காண மெரினாவுகு சென்றிருக்கிறார். இவர் கடுமையான வெயிலால பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஜான் உயிரிழந்தார்.

அதேபோல், விமான சாகச நிகழ்ச்சியை காண வந்திருந்த திருவெற்றியூரை சேர்ந்த கார்த்திகேயன் என்பவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. மயக்கமடைந்த கார்த்திகேயன் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது ஆம்புலன்சிலேயே கார்த்திகேயன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதே போல், பெருங்களத்தூரை சேர்ந்த சீனிவாசன் என்பவர் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்றிருந்தார். அப்போது அவருக்கு மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அதேபோல், விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க சென்ற மேலும் 2 பேர் உயிரிழந்தனர். 

வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க சென்றிருந்த மரக்காணத்தைச் சேர்ந்த மணி (37) என்பவர் உயிரிழந்தார். மேலும், 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். அதேபோல, 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் உயிரிழந்தார். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. 

விமானப் படையின் வான் சாகச நிகழ்சியின்போது வெயில்தாக்கம் காரணமாக 230 பேர் மயக்கம் அடைந்தனர். உடல் நலக்கோளாறு ஏற்பட்டு 93 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்தவர்களில் இதுவரை 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய மு.க. ஸ்டாலின் அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இந்திய பாதுகாப்புத் துறையின் முக்கிய அங்கங்களுள் ஒன்றான இந்திய விமானப் படையின் 92வது துவக்க நாள் விழாவை முன்னிட்டு, விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் வண்ணம் சென்னையில் இன்று வான் சாகச நிகழ்ச்சி அரங்கேறியது.

இதற்கான அறிவிப்பு முன்கூட்டியே வெளியான நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பார்வையிடக் கூடுவர் என்பது அறிந்து, போக்குவரத்து, அடிப்படை வசதிகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், இன்றைய நிகழ்ச்சியில் நிர்வாக ரீதியிலான ஏற்பாடுகளும், கூட்டத்தையும்- போக்குவரத்தையும் 
ஒழுங்கு படுத்துவதற்கு காவல்துறையினரும் போதிய அளவில் இல்லாததால், மக்கள் கடும் கூட்ட நெரிசலில் சிக்கி, குடிநீர்கூட கிடைக்காத நிலை ஏற்பட்டு, மேலும் வெயிலின் தாக்கத்தால் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியும் , 
மிகுந்த வேதனையும் அளிக்கின்றன.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலும் வருத்தங்களும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வைக்கூட முறையாக ஒருங்கிணைக்கத் தவறிய நிர்வாகச் சீர்கேடே உருவான விடியா தி.மு.க அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ராணுவ விமானப் படையின் தீரத்தை பறைசாற்றும் நிகழ்வுகள் இதுவரையில் சிறப்பாக நடைபெற்று வந்துள்ளன,ஆனால் இன்று தமிழகத்தில் நிகழ்பெற்ற நிகழ்வில் உயிர்சேதம் ஏற்பட்டிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.
 
இந்நிகழ்வுக்கு முறையான பாதுகாப்பு கொடுக்க தவறிய இந்த மு.க. ஸ்டாலின் அரசுக்கு அரசுக்கு என் கடும் கண்டனங்கள்” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது.” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மா. சுப்பிரமணியன் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது; “சென்னையில் இந்திய விமானப் படையின் வான்வழி சாகச நிகழ்ச்சியினைச் சிறப்பாக நடத்திடத் தமிழ்நாடு அரசின் நிர்வாகரீதியிலான முழு ஒத்துழைப்பும் வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியை முறையாகத் திட்டமிட்டு நடத்துவதற்காகத் தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசுத் துறை அலுவலர்களுடன் ஒருமுறையும் பின்னர் துறை அளவில் பலமுறையும் நடத்தப்பட்டன. 

இந்த ஆலோசனைக் கூட்டங்களில் விமானப் படை அதிகாரிகள் கோரிய அனைத்தும் கவனத்தில் கொண்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. 

நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் மாநில அரசின் சார்பாக இரண்டு சுகாதாரக் குழுக்கள், போதுமான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டது.

இது மட்டுமின்றி இந்திய இராணுவத்தின் சார்பாகவும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. இது தவிர அவசர மருத்துவ உதவிக்காக 40 ஆம்புலன்சுகளும் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
போதுமான அளவு பாராமெடிக்கல் குழுக்களும் அமைக்கப்பட்டு இருந்தன. 

ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 100 படுக்கைகளும் 65 மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தனர். 

சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தின் மூலமாக மெரினா கடற்கரையில் போதுமான எண்ணிக்கையில் தற்காலிக கழிவறைகள் மற்றும் குடிநீர் வழங்கலுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 

அதிகளவில் பொதுமக்கள் வரும் வாய்ப்பு உள்ளதைக் கருத்தில்கொண்டு 7500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

சென்னையில் இன்று நடைபெற்ற இந்திய விமானப் படையின் நிகழ்ச்சிக்கு அவர்கள் கோரியதற்கு மேலாகவே அனைத்து வசதிகளும் ஏற்பாடுகளும் தமிழ்நாடு அரசால் செய்து தரப்பட்டன என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று மா. சுப்பிரமனியன் தெரிவித்துள்ளார்.

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின்  ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது என்று வி.சி.க துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின்  ‘வான்படை சாகச’ கண்காட்சியை காண மக்கள் கூட்டம் இவ்வளவு வரும் என்று அரசு ஏன் முன்கூட்டியே கவனிக்க தவறியது. 

கொளுத்தும் வெயிலில் சுமார் பத்துலட்சத்திற்கும் மேறபட்ட மக்கள் கூடும் பொழுது அங்கு ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அதன்காரணமாக உடலில் நீர்சத்து குறைந்து மயக்கம் ஏற்படும்.சிலருக்கு மாரடைப்பும் ஏற்படும். இது அறிவியல் எதார்த்தம். இதையெல்லாம் திட்டமிட்டு ஏற்பாடுகளைச் செய்த பிறகே அரசு இந்த நிகழ்விற்கு பொதுமக்களை அனுமதித்திருக்க வேண்டும். இந்த நிகழ்விலோ கூடிய லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்திற்கு ஏற்ற வகையில் தேவையான குடிநீர் வசதியை ஏற்படுத்தவில்லை.ஆக்ஸிஜன் பற்றாக்குறையை அகற்ற போதிய இடவசதியை ஒருங்கு படுத்தவில்லை.பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க  முறையான  முதல் உதவி சிகிச்சை மையங்களையும் ஏற்பாடு செய்யவில்லை என்றே தெரிகிறது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிப்புக்கு உள்ளானதையும் காண முடிகிறது.அப்படி பாதிப்புக்கு உள்ளானவர்களை ஆம்புலன்ஸ்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் முடியாத  முடியாத நிலையில் போக்குவரத்து நெருக்கடியும் இருந்துள்ளது.

இவ்வளவு மக்கள் திரளும் போது மக்களை ஒழுங்குபடுத்தவும் அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன் ஏற்பாடுகளை தமிழக காவல்துறை,சுகாதாரத்துறை, பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை உள்ளிட்டை துறையினர் போர்க்கால அடிப்படையில் முன்ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். அதில் போதிய கவனம் செலுத்தாமல் போனதாலே இந்த உயிர் இழப்புகளும் நடந்துள்ளது.

அரசின் மூத்த நிர்வாகத்தினர் அனைவரும் வான்படை சாகச நிகழ்வை காணும் ஆர்வத்தில் மட்டுமே இருந்துள்ளனர். தேவையான அமைச்சர்களையோ, அதிகாரிகளையோ இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைக் கவனிக்க  முடக்கிவிடவில்லை என்பதை மக்களின் குமுறலில் இருந்தே அறிய முடிகிறது. 

எந்த அரசு தன்நலன் பேணாது  தன் மக்கள் நலனையே பெரிதாக பேணும் அரசோ அந்த அரசே மக்களுக்கான அரசாக விளங்கும். 

அரசின் கவனக்குறைவால் வான் படை சாகச நிகழ்வு சாதனை நிகழ்வாக மாறாமல் வேதனை நிகழ்வாக மாறிவிட்டது. அரசு இனிவரும் காலங்களிலாவது இது போன்ற நிகழ்வுகளில் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment