Advertisment

23 ஆண்டுக்குப் பிறகு... சென்னை மெரினாவில் விமானப் படை சாகசம்: எப்போது தெரியுமா?

வருகிற அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது

author-image
WebDesk
New Update
IAF airshow on October 6 Chennai Marina Beach Tamil News

சென்னை மெரினா கடற்கரையில் அக்டோபர் 6-ம் தேதி விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. மேலும், அக்டோபர், 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதையொட்டி, ஆண்டு தோறும் அக்டோபர் 8 அன்று நாடு முழுவதும் உள்ள இந்திய விமானப்படை தளங்கள் மற்றும் விமான நிலையங்களில் இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், வருகிற அக்டோபர் 8-ம் தேதி 92-வது இந்திய விமானப் படை தினம் நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. மேலும், ஒவ்வொரு இந்திய விமானப்படை தினத்தன்றும் டெல்லியில் விமானப்படை சாகசங்கள், அணிவகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இந்திய விமானப்படை வீரர்கள் நடத்துவது வழக்கம்.

Advertisment

இந்நிலையில், வருகிற அக்டோபர் 6-ம் தேதி சென்னை மெரினா கடற்கரையில் வான்வழி சாகச நிகழ்ச்சிகளும், அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட உள்ளது. நாட்டின் வான்வெளியை பாதுகாப்பதில் இந்திய விமானப்படையின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் அன்றைய தினம் இந்திய விமானப்படையின் வகை, வகையான விமானங்கள் காண்போரை கவர்ந்திழுக்கும் ஏரோபாட்டிக் வான் சாகசங்களில் ஈடுபட உள்ளன.

இந்த விமானப்படை சாகச நிகழ்வில், வானில் லாகவமாக வந்து குட்டிக்கரணங்கள் அடித்து வியப்புக்குள்ளாக்கும் ஆகாஷ் கங்கா அணி, ஸ்கைடைவிங் கலையில் விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மிக நெருக்கமாக வந்து சாகசங்கள் நிகழ்த்தும் சூர்யகிரண் ஏரோபாட்டிக் டீம், வான் நடனத்தில் ஈடுபடக்கூடிய சாரங் ஹெலிகாப்டர் அணி ஆகியவை தங்களது வான்கலைகளால் மக்களை பரவசத்தில் ஆழ்த்த உள்ளன.

மேலும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக போர் விமானம் தேஜஸ், இலகுரக போர் ஹெலிகாப்டர் பிரசாந்த் மற்றும் டகோட்டா, ஹார்வர்ட் போன்ற பாரம்பரிய பெருமைவாய்ந்த பழங்கால விமானங்கள், போக்குவரத்து விமானங்கள் என அனைத்து வகை விமானங்களும் விதவிதமான அணிவகுப்பில் ஈடுபட உள்ளன. 

இந்நிலையில், இது குறித்து தாம்பரம் விமானப்படை பயிற்சி மையத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்திய விமானப்படை துணை தளபதி பிரேம்குமார் பேசுகையில், ''92-வது விமானப்படை தினத்தில் சென்னை மெரினாவில் விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னை மெரினாவில் இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது மகிழ்ச்சியாக உள்ளது. இதுவரை டெல்லியில் நடைபெற்று வந்த விமான படை வான்வழி சாகச நிகழ்ச்சி தற்போது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறுகிறது.

வரும் 6-ம் தேதி காலை 11 மணி முதல் 2 மணி வரை இந்த சாகச நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இதில் அரோக்கோணம், பெங்களூரு, தஞ்சாவூர், சூளுர், தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து 72 விமானங்கள் பங்கேற்க உள்ளது. அதேபோல் அக்டோபர் 8-ம் தேதி தாம்பரம் விமானப்படை தளத்தில் வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சி காலை 7:30 மணி முதல் 11 மணி வரை நடத்தப்பட உள்ளது. மேலும், விமான சாகச நிகழ்ச்சியை காண்பதற்கு சென்னை மெரினாவில் சுமார் 15 லட்சம் மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். இதனை உலக சாதனையாக நிகழ்த்த உள்ளோம். சென்னையின் அனைத்து மக்களும் இதனை கண்டு களிக்க வேண்டும்.

இதற்கு முன்பு கடந்த 2003-ம் ஆண்டு விமானப்படை தினத்தன்று சென்னையில் வான் சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தற்போது 23 ஆண்டுகள் கழித்து சென்னை மெரினாவில் மீண்டும் விமானப்படை தினத்தன்று விமான சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு சண்டிகரிலும், 2023-ல் பிரயாக்ராஜிலும் விமான சாகச நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த ஆண்டு சென்னையில் நடத்தப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்திய விமான படையில் உள்ள பல்வேறு விமானங்கள் சாகசத்தில் ஈடுபட உள்ளன. சென்னையில் நடத்த ஏற்பாடாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறது." என்று அவர் கூறினார். 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

 

Chennai Marina Beach Indian Air Force
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment