சினிமா பாணியில் புளுடூத் மூலம் மனைவியிடம் கேட்டு பதில் எழுதிய ஐபிஎஸ் அதிகாரி சிக்கினார். அவர் கைது செய்யப்படலாம் என தெரிகிறது.
நாடுமுழுவதும் காலியாக உள்ள 985 சிவில் சர்விஸ் இடங்கள் காலியாக உள்ளன. இதற்கான முதல் கட்ட தேர்வு கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி நடைப்பெற்றது. இந்த தேர்வில் வெற்றி பெற்ற 13,350 பேர் தேர்வு பெற்றனர். இவர்களுக்கு அடுத்த கட்டமாக மெயின் தேர்வு நடைபெற்று வருகிறது. நாடுமுழுவதும் சென்னை உள்பட 24 முக்கிய நகரங்களில் மெயின் தேர்வு நடைப்பெற்று வருகிறது.
சென்னையில் எழும்பூரில் உள்ள பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்று வருகிறது. கடந்த 28ம் தேதி தேர்வு நடந்த போது, ஷபீர் கரீம் என்பவர், புளுடூத்தை காதில் மாட்டிக் கொண்டு தேர்வு எழுதினார். இதை கண்டுபிடித்த தேர்வு கண்காணிப்பாளர், அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது ஐதராபாத்தில் உள்ள தனது மனைவியிடம் பேசி தேர்வு எழுதியது தெரிய வந்தது.
தேர்வு கண்காணிப்பாளர் கொடுத்த புகாரையடுத்து, ஷபீர் கரிம் மீது 420 மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், ஷபீர் கரீம் கேரளாவைச் சேர்ந்தவர் என்பதும், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பயிற்சி ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.
இதையடுத்து, அவருக்கு போன் மூலம் தேர்வு எழுத உதவிய, ஐதராப்பாத்தில் உள்ள அவரது மனைவியிடம் விசாரணை நடத்தவும் போலீஸ் அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். அவர் மீதான புகார் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் நிருபிக்கப்பட்டிருப்பதால், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.