திடீர் உடல்நலக்குறைவு... பீலா வெங்கடேசன் ஐ.ஏ.எஸ் மரணம்

ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக எரிசக்தித் துறை முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா வெங்கடேசன் (55), உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றி, மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

ஐஏஎஸ் அதிகாரியும், தமிழக எரிசக்தித் துறை முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா வெங்கடேசன் (55), உடல்நலக் குறைவால் காலமானார். கொரோனா காலத்தில் தமிழக சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றி, மக்கள் மத்தியில் பிரபலமானவர்.

author-image
WebDesk
New Update
beela venkatesan

தமிழக அரசின் மூத்த மற்றும் திறமையான ஐஏஎஸ் அதிகாரியான டாக்டர் பீலா வெங்கடேசன், தனது 55 வயதில் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார். அவரது மறைவு, தமிழக அரசுக்கும் பொதுமக்களுக்கும் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்படப் பல தரப்பினரும் அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

1969ஆம் ஆண்டு, சென்னை கொட்டிவாக்கத்தில் பிறந்த இவர் 1997ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) அதிகாரியாகப் பொறுப்பேற்றார். இவரது தந்தை வெங்கடேசன் தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது தாய் ராணி வெங்கடேசன் சாத்தான்குளம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ் தாஸ் எனும் ஐபிஎஸ் அதிகாரியை காதலித்து 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட பீலா வெங்கடேசனுக்கு, இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் சிறப்பு டிஜிபி ராஜேஸ்தாஸ், பெரம்பலூர் பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், விழுப்புரம் நீதிமன்றம் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், அவரை பிரிந்து வாழ்ந்து வந்தார் 
 
டாக்டர் பீலா வெங்கடேசன் தனது சிறப்பான நிர்வாகத் திறமையால் பல துறைகளில் முத்திரை பதித்தார். செங்கல்பட்டு துணை ஆட்சியர், மீன்வளத்துறை திட்ட இயக்குநர், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆணையர் போன்ற பல்வேறு பதவிகளை வகித்தார். மேலும், இந்திய அரசு ஜவுளி அமைச்சகத்தில் கைத்தறி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

2019ஆம் ஆண்டு முதல் தமிழக சுகாதாரத்துறை செயலாளராகப் பணியாற்றிய டாக்டர் பீலா வெங்கடேசனின் பெயர், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் மக்களிடையே நன்கு அறியப்பட்டது. அந்தச் சவாலான காலகட்டத்தில், நோய்த்தொற்று குறித்த தகவல்கள், உயிரிழப்புகள், மற்றும் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தினமும் ஊடகங்களைச் சந்தித்து, மக்களுக்குத் தெளிவான மற்றும் வெளிப்படையான தகவல்களை அளிப்பதில் முக்கியப் பங்கு வகித்தார். அவரது நேர்மையான அணுகுமுறை மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல நம்பிக்கையைப் பெற்றுத் தந்தது. ஒரு குழந்தையால் உருவாக்கப்பட்ட அவரது ரீமேக் வீடியோ இன்றும் மக்கள் நினைவில் இருப்பது அவரது மக்கள் தொடர்புக்கு ஒரு எடுத்துக்காட்டு.

சுகாதாரத்துறை பணிக்குப் பிறகு, இறுதியாக அவர் தமிழ்நாடு அரசின் எரிசக்தித் துறை முதன்மை செயலாளராகப் பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவரது உயிர் இன்று பிரிந்தது. டாக்டர் பீலா வெங்கடேசன், ஒரு திறமையான நிர்வாகியாகவும், மக்களின் நலனில் அக்கறை கொண்டவராகவும் திகழ்ந்தார். அவரது மறைவு தமிழகத்திற்கு ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு.

Advertisment
Advertisements

ஸ்டாலின் இரங்கல்: பீலா வெங்கடேசன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். கொரோனா காலத்தில் சவால் மிகுந்த மருத்துவத்துறைச் செயலாளராகப் பணியாற்றியவர் பீலா வெங்கடேசன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அரசு உயர் அலுவலர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

tamilnadu news

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: